காதல் திருமணம் தொடர்பான சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்துள்ளது. அவர் முன்ஜாமீன் கோரிய நிலையில், கூடுதல் டிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆள் கடத்தலுக்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து, காவல்துறை ஏடிஜிபி ஜெயராமன் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதல் திருமணம் தொடர்பான ஒரு பிரச்சனையில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினரும், புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன் மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று முதல் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. இந்நிலையில், முன்ஜாமீன் மனு மீதான விசாரணைக்காக அவர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நீதிபதி இந்த விசாரணையின்போது சரமாரி கேள்விகளை எழுப்பினார். இதையடுத்து, ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 16-க்கு (நாளை) ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த ஆட்கடத்தல் சம்பவத்திற்கு, கூடுதல் டிஜிபி (ADGP) ஜெயராமன் அரசு வாகனத்தைப் பயன்படுத்தியதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், ஆட்கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து காவல்துறை பாதுகாப்பில் வைக்கவும் நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.