மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு, மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், மணல் சிற்பம் அமைத்துள்ளார்.

தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இவரது உடல் துபாயில் இருந்து இன்று மும்பை கொண்டுவரப்படுகிறது. 

ஸ்ரீதேவியின் உடல், துபாடியல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. துபாய் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்படும். ஸ்ரீதேவியின் உடல் இன்று இந்தியா கொண்டு வர, தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அம்பானியின் தனி விமானம் துபாய்க்கு சென்றுள்ளது. 

ஸ்ரீதேவியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலகங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். 

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக், உலகில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை மணல் சிற்பங்களாக செதுக்கி மக்கள் மனதில் பதிய வைத்து வருகிறார். 

இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும வகையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் அமைத்துள்ளார்.

சுதர்சன் பட்நாயக்கும், அவரது மாணவர்களும் பூரி கடற்கரையில், ஸ்ரீதேவியின் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர். இந்த சிற்பத்துக்கு அப்பகுதி மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.