தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, மாரடைப்பு காரணமாக நேற்று இரவு 11 மணியளவில் உயிரிழந்தார்.

துபாயில், நடைபெற்ற திருமண விழாவிற்காக நடிகை ஸ்ரீவித்யா குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் இறப்பு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஸ்ரீதேவி இறப்புக்கு முன்பாக டுவிட் செய்திருந்தது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றியதாகும். இந்த நிலையில், அவர் நடித்த கடைசி படமாக ஜீரோ அமைந்துள்ளது. 

நடிகர் ஷாருக்கான், ஆலியா பட், கரீஷ்மா கபூர் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஜீரோ படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க ஸ்ரீதேவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் நடிப்பதற்கு ஸ்ரீதேவி ஒப்புக் கொண்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம், அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.

தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி, ஆதிபராசக்தி படத்தில் ஜெயலலிதாவுடன் நடித்திருந்தார். அந்த படத்தில் ஜெயலலிதா பார்வதியாகவும், ஸ்ரீதேவி முருகனாகவும் நடித்திருந்தனர். 

இந்த நிலையில், ஸ்ரீதேவி நடித்த கடைசி படமாக ஜீரோ அமைந்துவிட்டது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையுலகில் நான்கு வயதில் கால் பதித்த ஸ்ரீதேவி, தனது 54 ஆம் வயதில் காலமாகியுள்ளார்.