துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல், தனி விமானம் மூலம் இன்று இரவு 8 மணியளவில் மும்பை கொண்டு வரப்பட உள்ளது.

நடிகை ஸ்ரீதேவி, துபாயில் நடைபெற்ற இந்தி நடிகரும், உறவினருமான மோகித் மார்வா திருமணத்திற்குச் சென்றிருந்தார். அவருடன் கணவர் போனி கபூர், மகள்கள் குஷி, ஜான்வி ஆகியோரும் துபாய்க்கு சென்றிருந்தனர். 

திருமண நிகழ்ச்சி முடிந்தபின், தனது குடும்பத்தினருடன் ஸ்ரீதேவி துபாயில் ரிசார்ட்டில் தங்கியிருந்தார். நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீதேவியை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். ஸ்ரீதேவியின் மரணத்தை அவரது மைத்துனர் சஞ்சய் கபூர் உறுதி செய்தார். 

ஸ்ரீதேவியின் இறப்பு இந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஸ்ரீதேவி மரணமடைந்துள்ள நிலையில், அவர் நடித்த படங்கள் குறித்து ரசிகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் உடலை, மும்பை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. துபாயில் இருந்து தனி விமானம் மூலம் அவரது உடலை மும்பை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தனி விமானம் மூலம் கொண்டு வரப்படும் ஸ்ரீதேவியின் உடல், இன்று இரவு 8 மணியளவில் மும்பை வந்து சேரும் என்று கூறப்படுகிறது. ஸ்ரீதேவியின் உடலைக் கொண்டு வர இன்று பிற்பகல், மும்பையி இருந்து தனி விமானம், துபாய் செல்கிறது.