டெல்லியில் கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் டெல்லியில் நடந்த டிராக்டர்பேரணியில் செங்கோட்டையில் நடந்த வன்முறையில் தொடர்புடைய நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார்
டெல்லியில் கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் டெல்லியில் நடந்த டிராக்டர்பேரணியில் செங்கோட்டையில் நடந்த வன்முறையில் தொடர்புடைய நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார்
பஞ்சாப் மாநிலம், முக்த்சரில் பிறந்தவர் தீப் சிங் சித்து. தீப் சித்து சட்டம் பயின்றவர். முதலில் மாடலங்கில் நுழைந்த சித்து, அதன்பின் நடிகராகினார். பாலிவுட் நடிகர் சன்னி தியோலின் உறவினர் என்பதால் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து, புகழ்பெற்றார். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதியில் நடிகர் சன்னி தியோல் போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார் தீப் சித்து.

வேளாண்சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தியப் போராட்டத்துக்கு தீப் சிங் ஆதரவு தெரிவித்திருந்தார். கடந்த 2021ம் ஆண்டு குடியரசு தினத்தன்று, விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் டெல்லி செங்கோட்டையில் வன்முறை நிகழ்ந்தது.
டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி அகற்றப்பட்டு, அதில் விவசாயிகள் கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியை ஏற்றவும், கலவரத்தைத் தூண்டியதும் தீப் சிங் சித்து என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் தீப் சிங் சித்துவைக் கடந்த ஆண்டு பிப்ரவரி 9ம்தேதி கைது செய்தனர். 2 மாதங்கள் சிறையில் இருந்தபின் தீப் சித்து ஜாமீனில் வந்தார்.
இந்நிலையில் நேற்று டெல்லியிலிருந்து பஞ்சாப்புக்கு தீப் சிங் சித்து காரில் சென்றார். அப்போது, ஹரியானா மாநிலம், சோனிபட் மாவட்டம் கார்கோடா எக்ஸ்பிரஸ் சாலை அருகே குந்தலி-மனேசர்-பல்வார் பகுதி சாலையில் தீப் சிங் சித்து கார் வந்தபோது, லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தீப் சிங் சித்து பலியானார்.

கார்கோடா காவல் நிலைய ஆய்வாளர் ஜஸ்பால் சிங் கூறுகையில் “ சாலைவிபத்தில் நடிகர் தீப் சிங் சித்து உயிரிழந்தார். அவருடன் பயணித்த ஒரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்
பஞ்சாப் முதல்வர் சரண்சித் சன்னி ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ சமூக ஆர்வலர், நடிகர் தீப் சிங் சித்து சாலைவிபத்தில் உயிரிழந்த செய்தி என்னை வேதனைப்படுத்துகிறது. அவரின் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” எனத் தெரிவித்தார்
