ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய் தத்தை மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மஹாராஷ்டிரா அரசால் முன்கூட்டியே விடுதலை செய்த உண்மை பேரறிவாளன் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மூலம் அம்பலமாகியிருக்கிறது.


முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்துவருகிறார்கள். அவர்களை விடுவிக்க தமிழக அமைச்சரவை முடிவு செய்து ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால், அந்தப் பரிந்துரை பல மாதங்களாக கிடப்பில் கிடக்கிறது. 7 பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு முட்டுக்கட்டைப் போடுவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சிபிஐ விசாரித்த வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்குதான் அதிகாரம் உண்டு என்று மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், சிறையில் இருப்பவர்களை விடுவிக்க ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. ஆனாலும் தமிழக ஆளுநர் 7 பேர் விடுதலை விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்திவருகிறார்.
இந்நிலையில் 7 பேரை போல தடா சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக ஆர்.டி.ஐ. மூலம் புனே எரவாடா சிறை நிர்வாகத்திடம் பேரறிவாளன் தகவல் கேட்டிருந்தார். அதில், “5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சஞ்சய் தத்தை விடுவிக்க மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை. சிறை சட்டவிதிகளின்படியே முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்”என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் சிபிஐ விசாரித்த சஞ்சய் தத் வழக்கில், மாநில அரசே விடுதலை செய்திருப்பது அம்பலமாகியிருக்கிறது.


1993-ம் ஆண்டில் மும்பையில் பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 253 பேர் இறந்தார்கள். இந்த வழக்கில் ஆயுத தடை சட்டத்தின் கீழ் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில்,  5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சஞ்சய் தத், விரும்பியபோதெல்லாம் பரோலில் விடுவிக்கப்பட்டார். மேலும் முன்கூட்டியே சிறையிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.