சபரிமலையில்  10 வயதுக்கு குறைந்த மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இளம் பெண்கள் பாராட்பரியமாக அனுமதிக்கப்படுவதில்லை.

இதை எதிர்த்து, சில அமைப்புகளின் சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 'சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை, மாநில அரசு வரவேற்பதாக அறிவித்துள்ள நிலையில், இந்த உத்தரவுக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை எழுந்துள்ளது. கேரளாவில் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், தொடர் போராட்டங்கள், பேரணிகள் நடந்து வருகின்றன. பெண்கள் பலரும், அய்யப்பன் கோவிலுக்கு செல்ல, தாங்கள், 50 வயது நிறைவடையும் வரை காத்திருக்க தயாராக இருப்பதாக கூறி, பிரசாரத்தில் ஈடுபட்டுஉள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய , மலையாள நடிகர், கொல்லம் துளசி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கென, தனி பாரம்பரியம் உள்ளது. இதை மீறி, கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்டால், மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்..

வழக்கமான நடைமுறையை மீறி, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால், அவர்கள் இரண்டு துண்டாக வெட்டப்படுவர் என்றும், அதில் ஒரு துண்டை டெல்லிக்கும் மற்றொரு துண்டை திருவனந்தவுரத்தில் உள்ள முதலமைச்சர் பினராயி விஜயன் அலுவலகத்துக்கும் அனுப்பி வைப்போம் என ஆவேசமாக தெரிவித்தார்.

வரும், 17 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், நடிகர் துளசியின் இந்த பேச்சு, சர்ச்சையையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.