உத்திர பிரதேசத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணின் மீது வாலிபர் ஒருவர் அமிலம் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

உத்தரபிரதேச மாநிலம், பிரமப்பூரி பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி. அதே பகுதியைச் சேர்ந்த சாகிர் அலி என்பவர், கல்லூரி மாணவியிடம் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தி உள்ளார்.

சாகிர் அலியின் விருப்பத்துக்கு, கல்லூரி மாணவி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இது குறித்து தன் பெற்றோரிடமும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சாகிர் அலியை கல்லூரி மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளர். தனது மகளுக்கு மீண்டும் தொல்லைக் கொடுத்தால், போலீசில் புகார் கொடுப்போம் என்றும் அவர்கள் எச்சரித்திருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த சாகிர் அலி, கல்லூரி சென்று வீடு திரும்பிய அந்த பெண்ணின் முகத்தில் ஆசிட்-ஐ வீசிச் சென்றுள்ளார். இதில் கல்லூரி மாணவி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அருகில் இருந்தோர், கல்லூரி மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தொடர்ந்து கல்லூரி மாணவியின் பெற்றோர், சாகிர் அலி மீது போலீசில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், சாகிர் அலி கைது செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.