According to the state government the sale of alcohol was Rs 160 crore.

கேரள மாநிலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையான 4 நாட்களில் ரூ. 160 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது என மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் விற்பனை

கேரள மாநிலத்தைப் பொருத்தவரை ஓணம் பண்டிகை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தன்று மது விற்பனை அபரிமிதமாக இருக்கும். அது இந்த ஆண்டிலும் எந்த குறையில்லாமல் மது விற்பனை நடந்துள்ளது.

ரூ.160 கோடி

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மாநிலத்தில் 4 நாட்கள் விடுமுறைவிடப்பட்டது. இதில் 4 நாட்களில் மாநிலத்தில் உள்ள 330 சில்லரை விற்பனை கடைகளில் மலையாள மதுப்பிரியர்கள் ரூ. 160 கோடிக்கு மது வகைகளை வாங்கியுள்ளனர்.

ரூ. ஆயிரம் கோடி

புத்தாண்டுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த மாதத்தின் மது விற்பனை ரூ. ஆயிரம் கோடியை எட்டும் என்று கேரள மாநில மதுவிற்பனை கழக(பி.இ.வி.சி.ஓ.) அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 இலக்கு

கேரள மாநில மதுவிற்பனை கழக(பி.இ.வி.சி.ஓ.) மேலாண்மை இயக்குநர் எச். வெங்கடேஷ் கூறுகையில், “ ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் மது விற்பனை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டைக் காட்டிலும், 10 முதல் 12 சதவீதம் விற்பனை உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.160 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

இவை அனைத்தும் அரசின் சில்லரை விற்பனைகடைகள் மூலம் நடந்தது. இன்னும் மொத்த விற்பனைக் கடைகள், பார்கள் மூலம் நடந்த விற்பனை கணக்கிட வில்லை. இந்த ஆண்டு ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ’’ எனத் தெரிவித்தார்.

அதிகபட்ச விற்பனை

இதில் பத்திணம்திட்டா மாவட்டம், வலஞ்சாவட்டம் நகரில் உள்ள மதுக்கடையில் மட்டும் ரூ.52 லட்சத்தும், கொச்சி விமான நிலையம் அருகே இருக்கும் நெடும்பஞ்சேரி மதுபான கடையில் ரூ.51.16 லட்சமும், சங்கனாச்சேரி மதுக்கடையில் ரூ.51.01 லட்சத்துக்கும் மது விற்பனையாகி உள்ளது.