இமாச்சல பிரதேசத்தில்  பள்ளிக்கூட பேருந்து ஒன்று  பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 குழந்தைகள் உட்பட 30 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர்.

இமாச்சல பிரதேசத்தில் காங்காரா மாவட்டம் நுர்பூர் பகுதியில் நுர்பூர்-சம்பா நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாசிர் ராம் சிங் பதானியா என்ற தனியார் பள்ளியின் பேருந்து பள்ளத்திற்குள் விழுந்து விபத்திற்குள் சிக்கியது.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளிப் பேருந்து சாலை ஓரத்தில் இருந்த செங்குத்தான பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.  விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

உடனடியாக தேசிய பேரிடர் மேலாண்மை படையும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் இறங்கினர். பேருந்தில் 12 வயதுக்கு குறைவான குழந்தைகள் அதிகமாக பயணம் செய்துள்ளனர்.  மொத்தம் 45 பேர் வரையில் பஸ்சில் பயணம் செய்து உள்ளனர். மீட்பு பணியின் போது மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்த விபத்தில் 27 பள்ளி குழந்தைகள் உள்பட 30 பேர் பலியாகினர்.

பலியான குழந்தைகள் அனைவரும் 10 வயதுக்குள் உள்ளவர்கள், அனைவரும் 5-ம் வகுப்பு வரை படித்து வந்தவர்கள் என்பதால், அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. விபத்தில் பேருந்து ஓட்டுநர் மதன் லால் மற்றும் இரு ஆசிரியர்களும் உயிரிழந்து உள்ளனர்.  படுகாயம் அடைந்த 13 பேர் பதன்கோட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு குழந்தைகள் மருத்துவர்கள், எலும்புமுறிவு, இஎன்டி சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட 50 பேர் கொண்ட மருத்துவர் குழு உடனுக்குடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.