இந்திய விமான படை வீரர் அபிநந்தனுக்கு “வீர் சக்ரா” விருது நாளை வழங்கப்பட உள்ளதை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்திய விமானப்படையின் ‘விங் கமாண்டர்’ தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் வர்த்தமானுக்கு இந்த ஆண்டுக்கான வீர் சக்ரா விருது
வழங்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி 27-ம் தேதி பாகிஸ்தானின் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக ராணுவ கவுரவ விருதான வீர் சக்ரா
விருது அபிநந்தனுக்கு வழங்கப்பட உள்ளது. 

பாகிஸ்தானுக்குப் பதிலடி அளிக்க பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த கூடாரங்கள் மீது வெடிகுண்டுத்
தாக்குதல் நடத்திய விமானப் படை வீரர்களுக்கும் ‘வாயு சேனா பதக்கம்’ வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா நடத்திய பதில் தாக்குதலின் போது பிணையாகப் பிடிக்கப்பட்டவர் அபிநந்தன்.
 
பாகிஸ்தானிடம் சிக்கியபோதும் தைரியத்துடன் செயல்பட்ட அபிநந்தனை அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் எனப்
பலரும் பாராட்டி வந்தனர். சில காயங்கள் காரணமாக சிகிச்சை பெற்று வரும் அபிநந்தன் விமானப்படை விமானிக்கான ஆரோக்கிய
தகுதிகளுடன் இருக்கிறாரா? என்பதற்கான பரிசோதனை பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவ மையத்தில் நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறும் சூழலில் மீண்டும் தனது விமானி பணியை அபிநந்தன் தொடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.