Asianet News TamilAsianet News Tamil

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது; ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி - உச்ச நீதிமன்றம்!

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

AAP candidate declared Chandigarh mayor Supreme Court order smp
Author
First Published Feb 20, 2024, 5:31 PM IST

சண்டிகர் மாநிலத்தில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், பாஜக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைய அதிகாரி அனில் மஸ்ஹி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில், வாக்கு சீட்டுகளை தேர்தல் அதிகாரி அனில் மஸ்ஹி  திருத்துவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணையின்போது, வாக்குச்சீட்டுகள் திருத்தப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகம் கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளது என்று கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், மாநகராட்சியின் முதல் கூட்டத்தொடரை காலவரையின்றி தள்ளிவைத்தது. தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மஸ்ஹி ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டது.

அதன்படி, நேரில் ஆஜரான அனில் மஸ்ஹி, வாக்குச்சீட்டில் எக்ஸ் என குறியிட்டத்தை ஒப்புக் கொண்டார். வாக்குச் சீட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டியதால் அவ்வாறு செய்ததாக அவர் விளக்கம் அளித்தார். இதனிடையே, பாஜக மேயர் வேட்பாளர் மனோஜ் சோன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வாக்குச் சீட்டுகளை ஆராய்ந்த பிறகே அதுகுறித்து முடிவெடுக்க முடியும். தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகளை 20ஆம் தேதி (இன்று) நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தது.

அதன்படி, வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சண்டிகர் மேயர் தேர்தல் குளறுபடி தொடர்பான வீடியோ காட்சிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் அனைவரும் முன்பாகவும் போட்டுக் காட்டப்பட்டது.  நீதிபதிகள் தங்களது திரைகளில் வீடியோவை பார்த்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேடு செய்து பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக தீர்ப்பளித்தது.

தேர்தல் ஜனநாயகம் நசுக்கப்படுவதை தடுக்க தங்களது உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்துவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும்: விசிக நேரில் கடிதம்!

சண்டிகரில் புதிதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டு பாஜக வேட்பாளரை முறைகேடாக வெற்றி பெற்றார் என அறிவித்த தேர்தல் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்ததற்காக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.தேர்தலில் முறைகேடு செய்ததற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் பிறப்பிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios