அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறை சதி: ஆம் ஆத்மி பரப்ரப்பு குற்றாச்சாட்டு!
அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறை சதி செய்வதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது
டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில் புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. டெல்லி ஆம் ஆத்மி அரசின் இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த புதிய கலால் கொள்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அதேசமயம், கலால் கொள்கையுடன் தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது. ஆனால், அதனை பெற்றுக் கொள்ளாமல் அவர் புறக்கணித்து வருகிறார், அந்த வகையில், அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அவருக்கு அனுப்பிய மூன்றாவது சம்மனை இன்று அவர் தவிர்த்துள்ளார்.
விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு அனுப்பப்பட்ட சம்மன் சட்டவிரோதமானது என குறிப்பிட்டார். அதேசமயம், அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறை சதி செய்வதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. விசாரணை அமைப்பு முதலமைச்சரைக் கைது செய்யும் நோக்கத்தில் இருப்பதாகவும், தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து அவரைத் தடுக்க விரும்புவதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்ய மத்திய அரசு முனைப்பு காட்டுவதாகவும், ஊழல் செய்யும் ஆளுங்கட்சி தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், பாஜகவுடன் கைகோர்த்தவர்கள் மீது விசாரணை அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
கொல்கத்தாவில் பத்து வயது சிறுமிக்கு சீன நிமோனியா பாதிப்பு!
இதற்கிடையில், டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்மனை பெற்ற பிறகு, விசாரணைக்கு எதற்காக அழைக்கப்பட்டுள்ளார் என கேட்டு அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், எதன் அடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்பப்படுகிறது எனவும் டெல்லி அமைச்சர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிஷி, “அரவிந்த் கெஜ்ரிவாலின் கேள்விகளுக்கு அமலாக்க இயக்குனரகம் இதுவரை பதிலளிக்கவில்லை. சம்மன்கள் சட்டவிரோதமானது என்று அதிகாரிகளுக்கு தெரியும். ஆனால், பாஜக அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதால் அவர்களால் உண்மையைச் சொல்ல முடியாத நிலையில் உள்ளனர். இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் மட்டுமே அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்க்ப்படுகிறார்கள்.” என குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி: ஓபிஎஸ் தகவல்!
ஆனால், எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா விமர்சித்துள்ளார். “இன்று மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் அவருக்கு அனுப்பப்பட்ட மூன்றாவது சம்மனைத் தவிர்த்துள்ளார். மறைப்பதற்கு ஏதோ இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. அதனால்தான் குற்றவாளி போல் தலைமறைவாகிறார் அவர்.” என ஷெஹ்சாத் பூனாவாலா விமர்சித்துள்ளார்.