ஆன்-லைன் மூலம் பொருட்கள் வாங்குவது,சேவைகள் பெறுவது, பணப்பரிமாற்றம் செய்வது என அனைத்துக்கும் பயன்படுத்தப்படும் டெபிட், கிரெடிட் கார்டுகளும், அவற்றின் பாஸ்வேர்டு, பின் நம்பர்களும் இனி தேவையில்லை.
அனைத்துக்கும் மாற்றாக, ஆன்-லைன் மூலம் பெறப்படும் அனைத்துக்கும் ஆதார் எண்ணை பயன்படுத்த மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக நாடுமுழுவதும் உள்ள வர்த்தகர்கள், சில்லரை வணிகர்கள், தனிநபர்கள் வர்த்தகம் செய்யும்போது ஆதார் எண் பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யும் பிரத்யேக ஆப்ஸை உருவாக்கும் முயற்சியில் ஆதார் (யு.ஐ.டி.ஏ.ஐ.)நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

பணமில்லாப் பொருளாதாரம் அமைய வேண்டும் என்றும் விரும்பும் பிரதமர் மோடியின் எண்ணத்துக்கு வலுசேர்க்கும் வகையில் நிதிஅயோக் இந்த திட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது.
இது குறித்து ஆதார் எண் வழங்கும்அமைப்பான யு.ஐ.டி.ஏ.ஐ.யின் தலைமைநிர்வாக அதிகாரி ஏ.பி. பாண்டே கூறுகையில், “ இரு நபர்களுக்கு இடையே, அல்லது கடையில் பொருட்கள், சேவைகள் வாங்கும்போது, டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம்செலுத்துவோம். அப்போது, பாஸ்வேர்டு போன்றவைகள் அளிக்கப்பட வேண்டும். ஆனால், இனி இரு நபர்களுக்கு இடையிலான பணப்பரிமாற்றத்தின் போது, இருவருக்கும் வங்கிக்கணக்கிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருந்தால், அந்த ஆதார் எண்ணை பயன்படுத்தி பணம் செலுத்தமுடியும். இதற்கான பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். இந்த ஆப்ஸில் பயன்படுத்துவோர், விரல்ரேகை, கண்கருவிழிஅடையாளம் ஆகியவை பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தப்படும்.

ரேஷன்கடைகளில் ஆதார் எண் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் திட்டத்தை ஆந்திரா மாநிலம் சிறப்பாகச் செய்து வருகிறது. ஆதார் எண் மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றம் ெடபிட், கிரெடிட்கார்டு, பின்நம்பர் இல்லாமல் நடக்கும். பிரதமர் மோடியின் செல்லாதரூபாய் நோட்டு அறிவிப்புக்குபின், ஆதார் எண் பதிவோர்கள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 7 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஆதார் அடிப்படையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான பிரத்யேக மொபைல் ஆப்ஸ் செல்போன்களில் பயன்படுத்தும் வகையில், தயாரிப்புகளை மேம்படுத்த மொபைல் நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். மேலும், அதில் விரல்ரேகை, கண்கருவிழி போன்ற அடையாளங்களை சேர்க்கும் வகையில் வடிவமைக்கவும் கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றார்
