aadhaar website is not safe now said troy hunt

ஆதார் இணையதளத்தில் அடிப்படை பாதுகாப்பில் நிறைய குறைபாடுகள் உள்ளன. இணையதளத்தில் ஊடுருவி, ஹேக்கர்கள் எளிதில் ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்திவிடும் அபாயம் இருப்பதாக ஆஸ்திரேலிய தகவல் பாதுகாப்பு வல்லுநர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கும் ஆதாரை மத்திய அரசு அவசியமாக்கிவருகிறது. அரசின் நலத்திட்ட சலுகைகளைப் பெற ஆதார் அவசியம் என அரசு வலியுறுத்துகிறது. மேலும் ஆதார் எண்ணை பான் எண், மொபைல் எண், வங்கிக்கணக்கு என அனைத்துடனும் இணைக்குமாறு மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.

அரசின் நலத்திட்ட சலுகைகளைப் பெறவும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. ஆதாரை கட்டாயப்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசின் நலத்திட்ட சலுகைகளைப் பெற ஆதாரை கட்டாயப்படுத்த கூடாது என உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி ஆதாரை பல வகையில் மக்களிடத்தில் மத்திய அரசு திணிக்கிறது.

ஆதார் எண் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இதற்கிடையே ஆதார் குறித்த தகவல்கள் முறையாக பாதுகாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துவருகிறது. இந்திய குடிமக்கள் அனைவர் குறித்த தகவல்களும் ஆதாரில் உள்ளது. அப்படிப்பட்ட ஆதார் தகவல்களை பராமரிக்கும் இணையதளம் பாதுகாப்பானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்துவந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய தகவல் பாதுகாப்பு வல்லுநரான டிராய் ஹண்ட், ஆதார் இணையதளத்தில் அடிப்படை பாதுகாப்பில் குறைபாடுகள் உள்ளதாக எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக டிராய் ஹன்ட் வலைபக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவின் ஆதார் முறை உண்மையாகவே பாதுகாப்பு நிறைந்ததாக இல்லை. நாங்கள் இந்தியாவின் ஆதார் கொள்கைக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதேநேரத்தில் அதன் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும் அது மாற்றி அமைக்கப்பட வேண்டிய கட்டாயமும் உள்ளது.

ஆதார் இணையதளத்தில் உள்ள குறைபாடுகளை ஹேக்கர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் ஆதார் இணையதள சர்வரில் ஊடுருவி தகவல்களை திருடி தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே ஆதார் இணையதள தகவல்களை பாதுகாக்க இந்திய அரசு சரியான நடவடிக்கைகலை மேற்கொள்ள வேண்டும் என அந்த டிராய் ஹண்ட் அறிவுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய தகவல் பாதுகாப்பு வல்லுநரின் இந்த தகவல் இந்திய மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.