செல்போன் எண், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க சட்ட திருத்தங்கள் கொண்டுவர மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கு தொடங்குவது, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில், சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த சில மாதங்களுக்கு முன், அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என தீர்ப்பளித்தது. ஆனாலும், செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் இல்லை என கூறியது. 

இந்நிலையில், செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பதற்கு மீண்டும் சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி டெலிகிராப் சட்டத்திலும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதன்படி, புதிய செல்போன் இணைப்பு (சிம்கார்டு) பெறவும், வங்கி கணக்கு தொடங்கவும் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து ஆதார் எண்ணை அளிக்கலாம். இது, அவர்களின் விருப்பத்தை பொறுத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.