கேரள அரசு ஊழியர்கள் வருகிற 31-ந்தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால் அவர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் வழங்கப்படமாட்டாது என்று கேரள அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

மத்திய அரசு தனது பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் பதிவை  செய்வதை கட்டாயம் ஆக்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று  வருகிறது.

இதுதொடர்பாக கேரள அரசு தலைமைச் செயலாளர் நளினி  பிறப்பித்துள்ள உத்தரவில் அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது ஆதார், ரேஷன் கார்டு, பான்கார்டு போன்றவற்றின் நகல்களை தாங்கள் பணிபுரியும் அரசு அலுவலகங்களில் வருகிற 31-திக்குள் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும் என்றும்  அப்போதுதான் அவர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கேரளாவில் 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மாதம் 1500  ரூபாய் மற்றும் அதற்கு மேல் மின்கட்டணம் செலுத்துபவர்களுக்கு ரேஷன் சலுகைகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட உள்ளதாகவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ரேஷன் கடைகளில் அரிசி மட்டும் பெற்றுக் கொள்ளலாம் என்றும்  மற்ற மானிய பொருட்கள் எதுவும் வழங்கப்படமாட்டாது என்றும்  இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் நளினி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு தொடர்பான  சுற்றறிக்கை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.