ஒரே பெயரில் பல டிரைவிங் லைசன்ஸ் இருப்பதைத் தடுக்கும் வகையில், இனி டிரைவிங் லைசன்ஸ் பெறும் போது ஆதார் எண் தெரிவிப்பதை கட்டாயமாக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே டிரைவிங் லைசன்ஸ் வைத்து இருப்பவர்கள் அதை புதுப்பிக்கும் போது ஆதார் எண்ணைகண்டிப்பாக தெரிவி்க்க வேண்டும் எனத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் பல லைசன்ஸ் வைத்து இருப்பவர்கள், பலவிபத்துக்கள் ஏற்படுத்தி குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், போலியாக லைசன்ஸ் வைத்து இருப்பவர்களைக் கண்டுபிடித்து தடுக்க முடியும் என்று அரசு நம்புகிறது.

ஆதாரில் இருக்கும் பயோ-மெட்ரிக் விவரங்கள் இந்த குற்றங்களை தடுக்கும் என்பதால், இந்த முறை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டம் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் தேவையான மாற்றங்களை செய்வதற்கு ஏற்கனவே பணிகளை தொடங்கிவிட்டது. டிரைவிங் லைசன்ஸ் பெறும்போது இந்த திட்டத்தைமாநில அரசுகள் கொண்டு வந்தால், குற்றங்களை குறைக்க முடியும், ஒரேநபர் பல மாநிலங்களில் லைசன்ஸ் பெறுவதையும் தடுக்க முடியும் என கேட்டுக்கொண்டுள்ளது.

இப்போதுள்ள நிலையில், பல லைசன்ஸ் பெறுபவர்கள் , வைத்து இருப்பவர்களை தடுப்பது மிகக்கடினம், போலீசால் கூட தடுக்க முடியவில்லை. ஆனால், ஆதார் மூலம் இவை இணைக்கப்படும் போது, கண்டிப்பாக தடுக்க முடியும், ஒரே நபர் இருஇடங்களில் லைசன்ஸ் பெறும்போது கண்டுபிடிக்கப்படும்.

அனைத்து மாநிலங்களில் உள்ள ஆர்.டி.ஓ.(வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்) மத்திய அரசின் “டேட்டாபேஸ்” தளதத்தில் இருந்து விவரங்களைப் பெற்று, ஒரு குறிப்பிட்ட நபர் ஏற்கனவே டிரைவிங் லைசன்ஸ் பெற்று இருக்கிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியும்.

அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆர்.டி.ஓ.க்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட டேட்டா பேஸ் இல்லாததால், பல லைசன்ஸ் பெற்று இருப்பவர்களை விசாரணையின் மூலமே கண்டுபிடிக்க முடிகிறது. இதற்கு பல மாதங்கள் ஆகும்.

ஆனால், தேசிய தகவல் மையத்தின் மூலம் பராமரிக்கப்படும் இந்த தகவல் தளத்தில் அனைத்து மாநில ஆர்.டி.ஓ.க்களும் இணையும் போது,  ஒரு குறிப்பிட்ட நபர் குறித்து எளிதாக விவரங்களைப் பெற்று அவர் ஏற்கனவே லைசன்ஸ் வைத்து இருக்கிறாரா என்பதை கண்டுபிடிக்க இயலும்.

போலியாகவோ, ஒரே நபர் இரு லைசன்ஸ் பெறவோ, பெற்று இருந்தாலோ கண்டுபிடிப்பது மிக சுலபமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது