நாட்டில் உள்ள 110 கோடி செல்போன் வாடிக்கையாளர்களையும் ஆதார் எண் அடிப்படையில், சரிபார்க்கும் பணியை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடங்க இருக்கின்றன.

ஆதார் எண் இல்லாதவர்கள் விரைவாக ஆதார் எண் பெற நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்த சரிபார்க்கும் பணியால், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏறக்குறைய ரூ. ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 6-ந்தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், தவறான தவலைக் கொடுத்து சிம்கார்டு பெறுவதைத் தடுக்கும் வகையில், இப்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் எண் அடிப்படையில் சரிபார்க்கும் பணியை தொடங்க வேண்டும்.

இதை 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தனியார் தொலைததொடர்பு நிறுவனங்கள் விரைவில் இதற்கான பணியைத் தொடங்க உள்ளன.

இது  தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது-

அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும், தங்களின் வாடிக்கையாளர்கள் முகவரி, விபரங்களை ஆதார் எண் அடிப்படையில் சரிபார்க்க வேண்டும். இதற்காக எஸ்.எம்.எஸ்., நாளேடுகள், தொலைக்காட்சிகள் வாயிலாக விளம்பரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வாடிக்கையாளர்களின் ஆதார் எண் அடிப்படையில் ஆய்வு செய்து சரியான நபர்தான் சிம்கார்டு எண் வைத்திருக்கிறார் என்பதை முடிவு செய்து. அதுதொடர்பான அறிக்கையை அளிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் சிம்கார்டுகளை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என எழுந்த சந்தேகத்தையடுத்து வாடிக்கையாளர்களின் முகவரிகளை சரிபாருங்கள் என்று மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு இருந்து.

அந்த பணி முடிந்து சில மாதங்கள் மட்டுமே ஆகி இருந்தநிலையில், இப்போது ஆதார் அடிப்படையிலான சரிபார்க்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

இந்த சரிபார்க்கும் பணியில் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு எஸ்.எம்.எஸ். மூலம் ஒரு அடையாள எண் அனுப்பி வைப்பார்கள்.

அதன்பின் வாடிக்கையாளர்களை அழைத்து அந்த எண்ணையும், முகவரியையும் கூறச்செய்து, ஒப்பிட்டுபார்த்து முடிவு செய்வார்கள். இதில் சிம்கார்டு உண்மையில், முகவரி வழங்கியவரிடம் தான் இருக்கிறதா அல்லது வேறு யாரிடமாவது இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும்.ஒருவேளை தவறான முகவரியையும், அடையாள எண்ணையும் கூறினால், செல்போன் இணைப்பு துண்டிக்கப்படலாம்.