இந்தியாவில் ஆதார் கார்டு திட்டத்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு கொண்டு வந்தது. அப்போது, ஆதார் கார்டு கட்டாயமில்லை. ஆனால், அனைவரும் எடுத்து கொள்ள வேண்டும் என கூறியது.

இதையடுத்து ரேஷன் கார்டு, கியாஸ் பதிவு செய்ய ஆதார் கார்டு, சிம் கார்டு, முதியோர், விதவை, மாற்று திறனாளிகள் ஆகியோருக்கான உதவி தொகை, வங்கியில் கணக்கு துவங்குவதற்கு என்பது உள்பட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியம் என அறிவித்தது.

இதற்கிடையில், கடந்த வாரம், அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் என பொதுமக்களிடம் வற்புறுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. ஆனால், அதனை ஏற்காமல் மத்திய அரசு, மீண்டும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண், பான் எண், செல் போன் எண் ஆகியவற்றை அளிப்பது இன்று முதல் கட்டாயமாகிறது.

இது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் போக்குவரத்துத் துறை கமிஷனர் தயானந்த் கட்டாரியா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான பதிவு சான்றிதழில் ஆதார் எண், பான் எண், செல்போன் எண் ஆகியவை கட்டாயம் இடம் பெற வேண்டும் என கூறிப்பிட்டுள்ளார்.