பொது மக்கள் தங்கள் வாகனங்களை பதிவு செய்வதற்கு, ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

இலவச சமையல் எரிவாயு மானியம், அரசின் இலவச திட்டங்கள், பான் கார்டு  உள்ளிட்ட விவகாரங்களுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இறப்புக்கு கூட ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது. 

இந்நிலையில், வாகன பதிவிற்கு அதன் உரிமையாளர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஹைதராபாத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் தெலுங்கானா போக்குவரத்து துறை அமைச்சர் மகேந்தர் ரெட்டி  அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது வாகன பதிவுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. 

இது தொடர்பாக தெலங்கானா அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தெலங்கானாவில்  சுமார் 95 லட்சம் வாகனங்கள் உள்ளன. அதேபோல், பெரிய அளவில் வாகன மாற்றம் நடைபெறுகிறது. வாகனங்கள் பதிவு மற்றும் வேறு ஒருவருக்கு மாற்ற ஆதார் எண்ணை கட்டாயமாக்குங்கள் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.