வருமானவரி செலுத்துபவர்கள் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அதை 4 மாதங்கள் நீட்டித்து, டிசம்பர் 31-ந்தேதி வரை இணைத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இதேபோல சமூக நலத்திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை இணைக்கும் காலத்தை டிசம்பர் 31-ந்தேதி வரை மத்திய அரசு நீட்டித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  இது தொடர்பான வழக்கையும் உச்ச நீதிமன்றம் நவம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துவிட்டது.

நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின் போது பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வருமானவரி செலுத்துபவர்கள் தங்களின் பான் கார்டு எண்ணுடன், ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயம் எனத் ெதரிவித்தார்.

இதன்படி வருமானவரிச்சட்டம், பிரிவு 139, ஏஏ(2) பிரிவின்படி, ஜூலை 1-ந்தேதிக்குள் வருமானவரி செலுத்துபவர்கள், பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாக்கப்பட்டது.

இதற்கான முதல்கட்ட காலக்கெடு ஜூலை 1-ந் தேதியாக அறிவிக்கப்பட்டது. அதன் பின், நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 31-ந்தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்தது.

இதற்கிடையே  கடந்த 5-ந்தேதி 2016-17ம் ஆண்டுக்கான வருமானவரி ரிட்டன்தாக்கலின் போது,  ஆதார் எண்ணுடன், ‘பான்கார்டை’ இணைத்திருக்க வேண்டும் என வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு இணைக்காமல் இருந்தாலும், இம்மாதம் இறுதிக்குள் அதாவது 31-ந் தேதிக்குள் இணைக்க காலக்கெடு விதிக்கப்பட்டது. அவ்வாறு இணைக்காதவர்களின் வருமான வரிரிட்டன் பரிசீலணைக்கு எடுக்கப்படாது எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடு 31-ந் தேதியோடு முடிவதாக இருந்தது. இந்நிலையில், பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை டிசம்பர் 31-க்கு நீட்டித்து வருமான வரி த்துறை நேற்று உத்தரவு பிறப்பித்தது.

அதேசமயம், வருமானவரிச் சட்டத்தின் படி, வௌிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், 80 வயதுக்கு மேல் ஆன மூத்த குடிமக்கள், அசாம், மேகாலயா, ஜம்மு, காஷ்மீர் சேர்ந்தவர்கள் பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.