G-20 Summit:அல்பம்! ஜி-20 மாநாட்டுப் பூந்தொட்டிகளை ரூ.40 லட்சம் சொகுசு காரில் வந்து திருடியவர்கள் கைது
இந்தியாவில் இந்த ஆண்டு நடக்கும் ஜி20 உச்சி மாநாட்டுக்காக, சாலையை அழகுபடுத்தும் நோக்கில் குர்கோவன் நகரில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டியை ரூ40 லட்சம் சொகுசுகாரில் வந்து திருடிச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் இந்த ஆண்டு நடக்கும் ஜி20 உச்சி மாநாட்டுக்காக, சாலையை அழகுபடுத்தும் நோக்கில் குர்கோவன் நகரில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டியை ரூ.40 லட்சம் சொகுசுகாரில் வந்து திருடிச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது. இதற்காக ஜி20 கூட்டம் நடக்கும் மாநிலங்களில் சாலைகள் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டெல்லி குர்கோவன் நகரில் சாலையின் இரு புறங்களிலும் அழகிய பூச்செடிகள், பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ40 லட்சம் மதிப்பிலான கறு ப்பு நிற சொகுசு காரில் வந்த இருவர் அந்தப் பூந்தொட்டிகளில் நல்ல செடிகளைப் பார்த்துப் பார்த்து எடுத்து தங்கள் காரில் வைத்து திருடிச் சென்றனர்.
சொகுசு காரில் வந்து பூந்தொட்டியை திருடியவர்கள் குறித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்திலும், செய்தி ஊடகங்களிலும் வெளியாகி வைரலானது.
ரூ.30 லட்சத்துக்கு அதிகமான காரில் வந்தவர்கள் ரூ.50க்கு பூந்தொட்டி வாங்கமாட்டார்களா?, இதைத் திருடலாமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
இதுபோன்ற சொகுசு கிரிமினல்களை, மக்களின் பணத்தில் வாங்கப்பட்ட பூந்தொட்டிகளை திருடியவர்களை போலீஸார் கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் வலியுறுத்தினர்.
இதையடுத்து, போலீஸார் காரின் நம்பர் பிளேட்டை வைத்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் குர்கோவன் காந்தி நகரைச் சேர்ந்த மன்மோகன் என்பது தெரியவந்தது. இந்த சொகுசு கார் மன்மோகன் மனைவி ஹிசாருக்குச் சொந்தமானது.
இந்த வீடியோவில் ஒருவர் பூந்தொட்டியை எடுத்துக்கொடுப்பதும், அதை மற்றொருவருவர் வாங்கி காரில் வைப்பதுமாக இருந்தது. இதில் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மற்றொருவரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் மன்மோகனும் மற்றொருவரும் டெல்லியில் இருந்து குர்கோவனுக்கு காரில் வந்தபோது, இந்த பூந்தொட்டிகளை திருடியுள்ளனர். இந்த சம்பவம் குர்கோவன் ஷெரோல் பகுதியில் நடந்துள்ளது.
இது குறித்து டிஎல்எப் பகுதி-3 போலீஸார் விசாரணை நடத்தி, மன்மோகனைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து காரையும், காரில் இருந்த பூந்தொட்டிகளையும் பறிமுதல் செய்தனர். மன்மோகனுக்கு உதவியாக இருந்த மற்றொரு நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.