மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நடிகர் திலீப்புக்கு, சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக, ஆலுவா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக எழுந்த தகவல்களை அடுத்து, பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. இந்த நிலையில், மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்-ம், சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக கேரள தொலைக்காட்சிகள் தெரிவித்துள்ளன.

மலையாள நடிகை, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கடந்த 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, கேரள மாநிலம் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார். நடிகர் திலீப்புக்கு, வரும் 22 ஆம தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆலுவா சிறையில் இருக்கும், நடிகர் திலீப்புக்கு, சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கேரள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன.

சிறையில் நடிகர் திலீப்புக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக, அவருக்கு பக்கத்து அறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஒருவர் கூறியுள்ளார்.

கேரள தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அவர், நடிகர் திலீப்புக்கு அதிகாரிகளுக்கு வழங்கும் உணவு அளிப்பதாகவும், இரவில் மட்டுமே உறங்குவதற்கு சிறைக்கு செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அது மட்டுமன்றி நடிகர் திலீப்பின் உடைகளைத் துவைக்கவும், பாத்திரம் கழுவவும், கழிவறையை சுத்தம் செய்யவும் கைதி ஒருவரை அவருக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.