சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திரத்துக்கு பிறகு பிறந்த பிரதமர் மோடியின் சாதனைகள் குறித்து இங்கு காணலாம்

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி இரண்டாவது முறையாக நடைபெற்று வருகிறது. 2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி, முதன்முறையாக டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார். தற்போது, சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை கொண்டாடி வரும் நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரதமர் மோடி 10ஆவது முறையாக செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றவுள்ளார். பிரதமர் மோடியின் இந்த ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, சுகாதாரம் என பல்வேறு துறைகளில் நாடு தனித்துவம் படைத்துள்ளது. இதற்கு முன்னிருந்த பிரதமர்கள் சுதந்திரம் கிடைப்பதற்கு முன் பிறந்தவர்கள். ஆனால், பிரதமர் மோடி சுதந்திரம் கிடைத்த பிறகு பிறந்தவர் அவரது ஆட்சிகாலத்தில் இந்தியா அடைந்த முன்னேற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

யாரும் பின் தங்கி விடக்கூடாது


‘யாரும் பின் தங்கி விடக்கூடாது’ என்ற சித்தாந்தத்துடன், ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஏழைகளுக்கும், ஒதுக்கப்பட்ட மக்களுக்கும் சேவை செய்வதே மோடி அரசின் அடிப்படை நோக்கம் என மத்திய அரசு கூறுகிறது. 2014 இல் ஆட்சிக்கு வந்தது முதல் நலத்திட்டங்களுக்கு அந்த்யோதயா கொள்கையால் ஊக்கமளிக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு திட்டத்திலும் 100% செறிவூட்டலை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.

அந்த வகையில், முத்ரா முதல் ஸ்டாண்ட் அப் இந்தியா வரை, மோடி அரசு கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியுள்ளது. கொரோனா தாக்கியதில் இருந்து, பிரதமர் கரிப் கல்யாண் அன்னா யோஜனா திட்டத்தின் கீழ் 80 கோடி மக்கள் இலவச உணவு தானியங்களைப் பெற்றுள்ளனர். ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் 11.72 கோடி கழிவறைகள் கட்டப்பட்ட நிலையில், 11.8 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும், 48 கோடிக்கும் அதிகமான ஜன்தன் கணக்குகள் அரசால் தொடங்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான மக்களுக்கு எல்பிஜி இணைப்புகள், மின்சாரம், இன்சூரன்ஸ், டிபிடிகள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் சுமார் 17 கோடி எல்பிஜி இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அரசாங்க தரவுகளின்படி, எல்பிஜி பயனாளர்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14.52 கோடியில் இருந்து, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31.36 கோடியாக அதிகரித்துள்ளது.

விவசாயத்துறையில் நவீன தொழில்நுட்பம்


கடந்த ஒன்பது ஆண்டுகளில், இந்திய விவசாயத் துறையில் ஒரு முன்னுதாரண மாற்றம் ஏற்பட்டுள்ளது. விவசாயம் நவீனமாகவும், அறிவியல் ரீதியாகவும், செழிப்பாகவும் மாற்றப்பட்டுள்ளது. ‘இன்று, இந்திய விவசாயி இந்தியாவுக்காக மட்டும் பயிரிடவில்லை. பரந்த அளவிலான தயாரிப்புகளுக்கான சந்தையாக உலகை நம்பிக்கையுடன் பார்க்கிறார்’ என மத்திய அரசு கூறுகிறது. பிரதமர் மோடியின் “பீஜ் சே பஜார் தக்” அணுகுமுறையால் வழிநடத்தப்பட்ட இந்தத் துறையில் ஒரு புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது. பி.எம். கிசான் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 6,000 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

விவசாய பட்ஜெட் 2014 ஆம் ஆண்டு முதல் 5.7 மடங்கு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 11 கோடி விவசாயிகள் நெல்லுக்கான பி.என்.கிசான் குறைந்த பட்ச ஆதரவு விலை மூலம் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம் தொடர்பான ஸ்டார்ட்அப்களுக்கு உதவி வழங்குதல் உட்பட விவசாயிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிகரிக்கும் கல்வி நிறுவனங்கள்


நாடு முழுவதும் கடந்த 9 ஆண்டுகளில் உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் 703ஆக இருந்த பல்கலைக்கழகங்கள் 2023இல் 1113ஆக உயர்ந்துள்ளது. கூடுதலாக, 5298 கல்லூரிகள் கடந்த 9 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் 43 சதவீத பல்கலைக்கழகங்களும், 61.4 சதவீத கல்லூரிகளும் ஊரக பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் 7 ஐஐடிக்களும், 7 ஐஐஎம்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

சமரசமில்லா வெளியுறவுக் கொள்கை


இன்றைய உலகின் வாய்ப்புகள் மற்றும் சவால்களுக்கு பதிலளிப்பதற்கு இன்றியமையாததாக இருக்கும் ஒரு ஆற்றல்மிக்க வெளியுறவுக் கொள்கையை பிரதமர் மோடி அரசாங்கம் வழங்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு முதன்மையான முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது இந்தியாவிற்கு வெளியே நடத்தப்படும் மீட்பு நடவடிக்கைகளில் காணப்படுகிறது, உள்நாட்டில் பயங்கரவாதக் கொள்கைக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் முதன்மைக் கவனம் அதன் உடனடி அண்டை நாடாகவே உள்ளது, 'அண்டை நாடு முதல் கொள்கை'யின் கீழ் உள்ளது.

பல்வேறு போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான குடிமக்களை இந்தியா மீட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு ஏற்றுமதியில் 334% வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், 2023-24 நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்திக்காக 75% மூலதன கையகப்படுத்தல் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா தனது தலைமையின் கீழ் 100 ஜி20 கூட்டங்கள் என்ற மைல்கல்லை சமீபத்தில் கடந்துள்ளது.

பெண்கள் அதிகாரமளித்தல்


கடந்த 9 ஆண்டுகால மோடி ஆட்சியில் பெண்கள் அதிகாரமளித்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெண் காவலர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு காணப்படுகிறது. விளையாட்டு துறையில் பெண்கள் சாதித்து வருகின்றனர். நாட்டிற்கு ஏராளமான பதக்கங்களை அவர்கள் பெற்றுத் தருகின்றனர். இதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக, பாலின விகிதம் பெண்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS) படி, 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் இப்போது இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஆட்சியில், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 12லிருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஜன் ஔஷதி கேந்திராக்களில் 27 கோடிக்கும் அதிகமான சானிட்டரி பேட்கள் வழங்கப்பட்டுள்ள. 27 கோடிக்கும் அதிகமான பெண் பயனாளிகளுக்கு முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொருளாதாரத்தில் முன்னேற்றம்


கொரோனா தொற்றில் இருந்து நாடு மிக விரைவாக மீண்டெழுந்தது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டன. ​​பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் இரண்டு ஆண்டுகளில் 2.2 பில்லியனுக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசிகளை வழங்குவதை உறுதி செய்தது.

உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் தரவரிசை 2010ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்குமிடையே நன்றாக வளர்ச்சி அடைந்து, உலகின் 5ஆவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. . கொரோனா பெருந்தொற்றால் கடந்த நாற்பதாண்டுகளில் முதல்முறையாக 2020-21-ஆம் நிதியாண்டில் பொருளாதாரம் 7.4 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும் 2021-22ஆம் ஆண்டு அந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்தது. வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து ஈர்க்கப்படுகின்றன.

பசுமை புரட்சி முதல் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் வரை: சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி!

2022-23 நிதியாண்டிற்கான தற்போதைய விலையில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்சி ரூ.272.41 லட்சம் கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2021-22இல் இது ரூ.234.71 லட்சம் கோடியாக இருந்த ஜிடிபியை ஒப்பிடும்போது 16.1 சதவீத வளர்ச்சி விகிதத்தை குறிக்கிறது. இதன் மூலம், வரும் ஆண்டுகளில் 3ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்க வாய்ப்புள்ளது.

தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பங்கு இல்லாத இடமே இல்லை


உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை இந்தியா கொண்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் 5ஜி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பெரிய நாடுகளுடன் இந்தியா போட்டியிடுகிறது. மொத்த நிகழ்நேர ஆன்லைன் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் 85 சதவீதம் பேர் செல்போன் பயன்படுத்தினர். ஆனால், இன்று 99.7 சதவீதம் பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். 2014 ஆம் ஆண்டில் மின்னனு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய சூழலில் தான் நாடு இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சம் கோடி மதிப்பிலான மின்னணு பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த 9 ஆண்டில் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பங்கு இல்லாத இடமே இல்லை என்ற நிலையை அடைந்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. அடுத்தக்கட்டமாக செமிகண்டக்டர் துறையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்படுகின்றன.

சாலை போக்குவரத்து


சுமார் 63.73 லட்சம் கி.மீ அளவிலான சாலை இணைப்பை இந்தியா கொண்டுள்ளது. உலகளவில் இரண்டாவது பெரிய அமைப்பு இது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைப்பில் கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2014-15 ஆண்டை ஒப்பிடுகையில், 2021-22ஆம் ஆண்டில் கட்டுமான வேகம் அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 12 கி.மீ சாலை கட்டப்பட்ட நிலையில், 2021-22இல் நாளொன்றுக்கு 29 கிமீ தூரத்திலான சாலைகள் கட்டப்படுகின்றன.

அதேபோல், ரயில் போக்குவரத்தில் நவீன வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அமிர்த பாரத் திட்டம் தொடங்கப்பட்டு ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், சிறந்த பயண சேவையை மக்களுக்கு அளிக்கும் பொருட்டு, விமான நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

வனவிலங்கு, ஈரநிலப் பகுதிகள் பாதுகாப்பு


பருவநிலை மாறுபாடு குறித்த செயல் குறியீட்டில், இந்தியா தற்போது முதல் 5 நாடுகளுக்குள் இடம் பெற்றுள்ளது. காடுகள் மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பதிலும் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. புலிகள், சிவிங்கி புலிகள், ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கைகளை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஈரநிலப் பகுதிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, ராம்சார் மாநாட்டின் கீழ், சீனாவுடன் இணைந்து, மே 2022 நிலவரப்படி மொத்தம் 75 ஈரநிலங்கள் ராம்சார் தளங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியா ஆசியாவில் 1ஆவது இடத்தில் உள்ளது.