விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்ததுபோல் நான் வாங்கிய ஒன்றரை லட்சம் ரூபாய் கடனையும் தள்ளுபடி செய்து விடுங்கள் என்று ஸ்டேட் வங்கி மேனேஜருக்கு துப்புரவு தொழிலாளி ஒருவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார்.
இவர், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு மட்டும் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் பாக்கி வைத்துள்ளார்.
இந்நிலையில், விஜய் மல்லையா உட்பட மொத்தம் 63 பேரின் கணக்குகளில் இருந்த வாராக் கடன் தொகை ரூ.7,016 கோடியை எஸ்பிஐ தள்ளுபடி செய்துவிட்டதாக தகவல்கள் வெளியானது.

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அமைச்சர் அருண் ஜெட்லி கூறியாதாவது, இந்த தொகை தள்ளுபடி செய்யவில்லை என்றும்,வாராக்கடனாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மராட்டிய மாநிலம், நாசிக் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருபவர்பவ்ராவ் சோனாவானே. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகனின் மருத்துவ செலவுக்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியன் வங்கியில் கடன் வாங்கியுள்ளார்.

இது தொடர்பாக தற்போது, ஸ்டேட் வங்கி கிளை மேனேஜருக்கு அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், விஜய் மல்லையாவின் கடன் தொகையை தள்ளுபடி செய்திருப்பது நல்ல முடிவுதான்.
விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்தது போல், என் மகனின் மருத்துவ சிகிச்சை செலவுக்காக வாங்கிய ஒன்றரை லட்சம் ரூபாய் கடனையும் தள்ளுபடி செய்து விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
