கேரளாவின் வனப்பகுதியில் ராத்திரியில் காரிலிருந்து தவறி விழுந்த குழந்தை சாலையில் தவழ்ந்து சென்றதும், குழந்தையை விட்டு தாய் 45 கிலோ மீட்டர் தூரம் காரில் சென்ற சம்பவமும் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த காம்பிளி தனது ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு மொட்டை போட பழனிக்கு குடும்பத்துடன் ஜீப்பில் சென்றார். பிரார்த்தனையை முடித்துவிட்டு இரவு வேளையில் கேரளாவுக்கு திரும்பினர். இரவு நேரம் என்பதால், ஜீப்பில் இருந்த அனைவரும் நன்றாக உறங்கிவிட்டனர். குழந்தையும்  தாயின் மடியில் உறங்கியுள்ளது. வண்டி ஒரு திருப்பத்தில் திரும்பும்போது தாயின் மடியிலிருந்த குழந்தை ஜீப்பிலிருந்து வெளியே விழுந்துவிட்டது.
ஆனால், இதை அறியாமல், குழந்தை விழுந்த இடத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள இடுக்கிக்கு வந்து சேர்ந்தனர். வீடு வந்து சேர்ந்தபோது குழந்தை இல்லாததை கண்டு அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அலறியடித்தபடி மீண்டும் வந்த வழியில் குழந்தையைத் தேடத் தொடங்கினர்.


இந்நிலையில் குழந்தை விழுந்த இடத்துக்கு அருகே அதிர்ஷ்டவமாக ஒரு சோதனை சாவடி இருந்திருக்கிறது. சோதனை சாவடியில் பணியாற்றி ஊழியர் ஒருவர், சாலையில் ஏதோ ஊர்ந்து செல்வதைக் கண்டு, அதைப் பார்க்க அருகில் சென்றார். அப்போதுதான் சாலையில் குழந்தை என்பது அவருக்கு தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த ஊழியர், உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் காயம் அடைந்திருந்த குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். பின்னர் அதே வழியில் பதறியடித்து வந்த பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.


 இதுகுறித்து மூணாறு வனச் சரக அதிகாரி லட்சுமி கூறுகையில், “ராஜமலா சோதனைச் சாவடி அருகேதான் குழந்தை விழுந்திருக்கிறது. சோதனை சாவடி வெளிச்சத்தைப் பார்த்து குழந்தை தவழ்ந்து வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். அப்போது நேரம் 10 மணி இருக்கும். சாலையில் தவழ்ந்து அந்த குழந்தை வந்தது ஆச்சரியமாக இருக்கிறது. சாலையில் வாகனங்கள் சென்றுவந்த நிலையில், அதில் சிக்கிக்கொள்ளாமல் குழந்தை வந்தது அதிசயம்தான். குழந்தையின்  தலையில் காயங்கள் இருந்தன. மூக்கில் ரத்தம் வடிந்ததால், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்” என்று தெரிவித்திருந்தார். 
ஒன்றரை வயது குழந்தை சாலையில் தவழ்ந்து சென்ற அதிர்ச்சியூட்டும் காணொலி காட்சிகள் அங்குள்ள சிசிடியில் பதிவாகியிருந்தது. அந்தக் காணொலி காட்சி சமூக ஊடகத்தில் வைரலாகிவருகிறது.