கேஸ் ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!
கேஸ் ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் கேஸ் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் இரண்டு வேகன்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு தொழிற்சாலையில் ரேக்குகளை காலி செய்ய சென்றபோது சரக்கு ரயில் நேற்று இரவு விபத்துக்குள்ளானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள உள்ள ஷாபுரா பிடோனி நிலையத்தில் உள்ள பாரத் பெட்ரோலியம் கிடங்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், எரிவாயு ரேக்குகளை காலி செய்ய சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தினால் எந்த சேதமும் ஏற்படவில்லை. மெயின் லைனில் ரயில் சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. ரயில் சேவைகள் எப்போதும்போல் செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளனர்.
கேஸ் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் இரண்டு வேகன்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசா விபத்துக்குப் பின் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இன்று முதல் மீண்டும் இயக்கம்
முன்னதாக, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ரயில்கள் விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளதாகவும், ரயில் விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் எனவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதேபோல், சிக்னல்கள் கோளாறு காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.