உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதிர்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்ற வருகிறது. அம்மாநிலத்தில் விஎச்பி போன்ற இந்து அமைப்புகள் காதலிப்பவர்களுக்க எதிராக செயல்பட்டு வருகினறனர். பொது இடங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் காதலர்களைப் பார்த்தால் அவர்களை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள்  அடித்து, உதைத்து இழுத்துச் சென்று போலீசில் விட்டுவிடுவார்கள். இதற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் ஆதரவு அளித்து வருகிறார். இந்நிலையில் மீரட் நகர போலீஸார் ஒரு பெண்ணை அடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகின.

 அந்த வீடியோவில் ஒரு பெண்ணை, ஒரு பெண் போலீஸார் உள்பட 3 போலீஸார் அடித்து உதைத்து ஜீப்பில் ஏற்றிச் செல்கின்றனர். அந்தப் பெண்ணிடம் நீ இந்துவாக இருந்து   கொண்டு ஒரு முஸ்லிம் இளைஞரோடு ஏன் பழகுகிறாய், இந்து இளைஞர் இல்லையா என்று ஆண் போலீஸார் கேட்டு அந்தப் பெண்ணைத் தாக்குகின்றனர்.

மேலும், பெண் போலீஸார் ஒருவரும் அந்தப் பெண்ணைக் கன்னத்தில் அறைந்த காட்சியும் அதில் இருக்கிறது.

இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. மீரட் மருத்துவக் கல்லூரி அருகே இந்தப் பெண்ணும், முஸ்லிம் இளைஞர் ஒருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இதைப் பார்த்த விஎச்பி அமைப்பினர் இருவரையும் தாக்கி, போலீஸுக்குத் தகவல் அளித்தனர். போலீஸார் அங்கு இருவரையும் தனித்தனி வாகனங்களில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட தலைமைக் காவலர் சலேக் சந்த், கான்ஸ்டபிள் நீது சிங், பெண் போலீஸ் பிரியங்கா ஆகியோர் தற்போது  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.