அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு’ (ஐ.சி.ஐ.ஜே) இந்த பனாமா ரகசிய ஆவணங்களை கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் வராத்தில் வெளியிட்டது.

பனாமா ரகிசய ஆவணங்கள் முழுமையும் ஒருவர் தனது நாட்டை ஏமாற்றி, வரி ஏய்ப்பு செய்து சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்துக்கள் விவரம், முறைகேடாக சேர்க்கப்பட்ட பணம், குற்றங்களை, தீவிரவாதத்தை வளர்க்க பயன்படுத்தப்பட்ட விதம், நாடுகளை எப்படி சுரண்டிச் சேர்க்கப்பட்டது என்பதை விளக்குபவையாக இருக்கும்.

வெளிநாடுகளில் தொடங்கப்பட்ட பெரும்பாலான நிறுவனங்கள் சட்டவிரோதமான சொத்துக்களால் உருவானவைதான். இந்த பொன்சேகா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை நேரடியாக இந்த குற்றங்களில் ஈடுபட வைக்காமல், நிறுவனங்களை தொடங்கி சொத்து சேர்க்க உதவி இருக்கிறது என்பதை தெரிவிக்கும்.

இந்த ஆவணங்களில் இந்த முக்கிய தலைவர்கள், சர்வதேச நட்சத்திரங்கள் எப்படி, எந்த வடிவத்தில் சொத்துக்களை குவித்து வைத்துள்ளனர், எத்தனை கோடிக்கு சொத்துக்கள் உள்ளன என்பது உள்பட பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி இருக்கின்றன.

யார் இந்த மொசாக் பொன்சேகா?

உலகின் பல்வேறு நாடுகளில் நிறுவனங்களை தொடங்குவதற்கு உதவி வரும், பனாமாவைச் சேர்ந்த ‘மொசாக் பொன்சேகா’ நிறுவனத்தில் இருந்து இந்த ஆவணங்கள் ரகசியமாக பெறப்பட்டுள்ளன. அதனால் இது பனாமா பேப்பர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ‘மொசாக் பொன்சேகா’ நிறுவனத்தை ரமோன் பொன்சேகா என்பவர் நடத்தி வருகிறார். கடந்த 1977-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரை 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பு செய்து சொத்துகுவிக்க முயலும் பலருக்கு 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களை வெளிநாடுகளில் அமைத்துக்கொடுத்து இருக்கிறது. இந்த மொசாக் நிறுவனத்துக்கு 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தில் இருந்து ரகசியமாகப் பெறப்பட்ட ஆவணங்களின் தகவல்கள் மதிப்பு 2.6 டெரா பைட்டாகும். அதாவது, இந்த ஆவணங்களை தொகுக்க 600 டி.வி.டிகள் தேவைப்படும் என்பதாகும்.

இந்தியாவில் யார் யார்?

இந்த ஆவணங்களில் உள்ள பட்டியலில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஐஸ்லாந்து பிரதமர், கால்பந்துவீரர் லியோனல் மெஸ்ஸி உள்ளிட்ட பலரும் இடம் பெற்றனர்.

யார் யார்?

இதில் 12 நாடுகளின் இப்போதைய தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மிகப்புகழ்பெற்ற 140 அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், போர்ப்ஸ் பத்திரிகையில் இடம் பெற்ற 29 சர்வதேச பெருங்கோடீஸ்வரர்கள், விளையாட்டு வீரர்கள், தீவிரவாத குழுக்கள், போதை மருந்து கடத்தல் கும்பல்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஏறக்குறைய ஒரு கோடியே 15 லட்சம் ஆவணங்கள் வெளியாகி இருக்கின்றன.

வெளிநாட்டு கணக்குகள் என்றால் என்ன?

ஆப்ஷோர் அக்கவுண்ட் என்பவை ஒருவர் தன்நாட்டைத் தவிர்த்து அயல்நாட்டில் தொடங்கப்படும் வங்கிக் கணக்குகள் ஆகும். பெரும்பாலும் வரி ஏய்ப்பாளர்களின் புகலிடமாக உள்ள நாடுகளில் இந்த கணக்குகள் தொடங்கப்படும். அதாவது இந்த நாடுகளில் ஒன்றில் ஒரு நிறுவனத்தை பெயருக்கு தொடங்கிவிட்டு, அந்த நிறுவனத்தின் பெயரில் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவிப்பது நடந்துள்ளது.