சென்னை வளசரவாக்கம்  எஸ்.பி.எஸ் நகர் 6 வது  தெருவில் உள்ள சாக்கடை கழிவுநீர் குழாய் ஒன்றில் இருந்து  காலை 8.30 மணிக்கு பிறந்த குழந்தை  ஒன்றின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது.

அப்போது அங்கிருந்த கீதா என்ற  பெண் ஒருவர்  கழிவுநீர் குழாய்க்குள் எட்டிப் பார்த்தபோது  பிறந்து இரண்டே மணி நேரமான தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் குழந்தை ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

.

இதையடுத்து அந்தப் பெண், குழந்தையை மீட்டு, சுடு நீரால் அதைனைக் கழுவி சுத்தம் செய்தார். முதலில் அந்த குழந்தை  இறந்துவிட்டதாக அனைவரும் நினைத்திருக்க, வெளியே இழுக்கும்பொழுது அக்குழந்தை உயிருடன் இருந்தது சுற்றி இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சாக்கடை குழாயில் சிக்கிக்கொண்டு இவ்வளவு நேரம் உயிரை தாக்குபிடித்திருந்ததை கண்டு அனைவரும் பிரமித்தனர்.

இதனைத் தொடர்ந்து  அக்குழந்தையை மீட்ட அந்த பெண் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சுதந்திர தினத்தில் கண்டெடுதக்கப்பட்டாதால் அந்த பெண் குழந்தைக்கு அப்பகுதி மக்கள் சுதந்திரம் என பெயர் சூட்டினர்.

இதையடுத்த அந்த குழந்தை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இது குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு  செய்து குழந்தையின் பெற்றோர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை மீட்ட கீதாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வாழ்த்தினர். மேலும் அப்பகுதி பொது மக்களும் கீதாவை வாழ்த்தினர்.