இதை அடுத்து இரு தரப்பினரும் கற்களை வீசி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் அங்கு மோதல் ஏற்பட்டது.
ராஜஸ்தான் காவல் துறையினர் இரு வேறு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் தொடர்புடைய 97 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் பகுதியில் ரம்ஜான் தினத்தன்று நடைபெற்ற மோதல் காரணமாக, ஜோத்பூர், உதய் மண்டிர் மற்றும் நகோரி கேட் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜோத்பூரில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது இரு தரப்பினர் இடையே திடீரென மோதல் வெடித்தது. இதை அடுத்து இரு தரப்பினரும் கற்களை வீசி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் அங்கு மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீசாரில் நான்கு பேர் உள்பட மொத்தம் பத்து பேர் காயமுற்றனர்.

போலீஸ் கட்டுப்பாடு:
மோதல் வெடித்ததை அடுத்து, ஜோத்பூர் பகுதி முழுக்க தடுப்புகள் அமைத்து காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் அந்த பகுதியில் ஏற்கனவே இருந்ததை விட அதிகளவு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இத்துடன் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அந்த பகுதிகளில் தொடர்ந்து பதற்ற சூழல் தான் நிலவுகிறது.
இதனிடையே போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், மோதலில் ஈடுபட்டவர்களில் 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநில முதல்வர் ஜெலோத் வசிக்கும் பகுதியிலேயே ரம்ஜான் தினத்தன்று மோதல் ஏற்பட்ட விவகாரம் பொது மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.க. பின்னணி:
அம்மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்துக்கு பா.ஜ.க. தான் காரணம் என முதல்வர் கெலோட் குற்றம்சாட்டி உள்ளார். "பா.ஜ.க. ஆட்சியில் வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் அதிகரித்து விட்டதை அடுத்து பொது மக்களை திசை திருப்பும் நோக்கில் இந்த வன்முறை தூண்டப்பட்டு உள்ளது," என அவர் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக டெல்லி, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட வன்முறை சம்பவங்களின் நீட்சியாக நேற்று ஜோத்பூரில் நடந்த வன்முறை அமைந்து இருக்கிறது.
