Kerala high Court: கேரளாவில் 9 துணைவேந்தர்களும் பதவியில் நீடிக்கலாம்; உயர்நீதிமன்றம் உத்தரவு!!
கேரளாவில் 9 துணைவேந்தர்களும் வேந்தரின் இறுதி உத்தரவு வரும் வரை பதவியில் நீடிக்கலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனது உத்தரவுப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்குள் ராஜினாமா கடிதங்களை அனுப்ப மறுத்ததால், ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
''தற்போது ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர். இப்போது முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன" என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று காலை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்து இருந்தார். யுஜிசி ஒழுங்குமுறை விதிகளுக்கு மாறாக அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்பட்ட துணை வேந்தர்களின் தேர்வு செல்லாது என்று கூறினார்.
பல்கலைக்கழகங்களின் வேந்தராக கடமையாற்றுவதாக கான் குறிப்பிட்டு இருந்தார். 9 துணை வேந்தர்கள் நியமனம் சட்டப்படி இல்லை. அவர்கள் மீது தனித்தனியாக குற்றத்தை நான் காணவில்லை. நான் ஒரு கெளரவமான வெளியேற்றத்தை மட்டுமே பரிந்துரைத்துள்ளேன். நான் அவர்களை பதவி நீக்கம் செய்யவில்லை. அதற்கான நடவடிக்கை இன்று தொடங்கியுள்ளது என்றும் தெரிவித்து இருந்தார்.
துணை வேந்தர்களுக்கு 24 மணி நேர கெடு விதித்த ஆளுநர்..! பதிலடி கொடுத்த கேரளா அரசு
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. இன்னொரு புறம் ஆளுநரின் நகர்வுகளை எதிர்த்து போராட்டம் நடத்த ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இப்படி மாநில அரசுக்கும் கேரள ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்ச தொட்டு வருவது, கேரள அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, அனைத்து துணை வேந்தர்களும் ஆளுநரின் உத்தரவை மதிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இந்த நிலையில்தான், 9 துணைவேந்தர்களும் வேந்தரின் இறுதி உத்தரவு வரும் வரை பதவியில் நீடிக்கலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்துக் கொண்டு இருந்தது.
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை அமைப்பது யார்? பாஜக Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி - முந்துவது யார் ?