உத்தரகாண்டில் பள்ளி வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளிக்குழந்தைகள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

உத்தரகாண்ட் மாநிலத்தின் தேக்ரி மாவட்டத்தில் உள்ள மந்தாகினி நகரை நோக்கி தனியார் பள்ளி வாகனம் ஒன்று காலை சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், 10 குழந்தைகள் காயம் அடைந்தனர்.

 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் மற்றும் மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் காயமடைந்த 10 குழந்தைகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.