இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார வளர்ச்சிக்கு குறைவை  போக்குவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறை சார்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த சில வாரங்களுக்கு முன் 10 பொதுத்துறை வங்கிகளை 4வங்கிகளுடன் இணைத்து வங்கிச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். 

அதைத் தொடர்ந்து ஏற்றுமதி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் பொருளாதா சலுகைகளை அறிவித்து வருகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை நிதியமைச்சர் அறிவித்தார்.

நாடு முழுவதும் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில் பல வங்கிகளை இணைத்து இனிமேல் 12 வங்கிகளாகச் செயல்படும் என்ற அறிவிப்பையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதுகுறித்து வெவ்வேறு விதமான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் சில வர்த்தக வங்கிகளை மூடப்போவதாக சமூகவலை தளங்களில் செய்திகள் வெளியாகின.

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவலால் மகாராஷ்டிராவில் அந்த வங்கி கிளைகளில் கூட்டம் அலைமோதியது. பணத்தை எடுக்க மக்கள் முனைந்தனர். இதனால் அந்த வங்கி அதிகாரிகள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகினர்.

இந்தநிலையில் 9 பொதுத்துறை வங்கிகளை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. ஆனால், அவ்வாறு எழும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி டிவிட்டரில் கூறுகையில் “ ரிசர்வ் வங்கி 9 பொதுத்துறை வங்கிகளை மூடப்போவதாக சமூக ஊடகங்களில் செய்தி வலம் வருகிறது. அதை நம்ப வேண்டாம் அதுஉண்மைக்கு புறம்பானது” என விளக்கம் அளித்துள்ளது.

இதுபோலவே நிதித்துறைச் செயலாளர் ராஜீவ் குமார் டிவிட்டரில் கூறுகையில் ‘‘சில வர்த்தக வங்கிகளை மூட ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருவதாக சமூகவலை தளங்களில் வெளியான தகவல் முற்றிலும் தவறானது.

யுசிஓ வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, ஆந்திரா வங்கி, ஐஓபி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, தேனா வங்கி, யுனைடெட் பேங் ஆப் இந்தியா ஆகிய 9 வங்கிகளை மூடப்போவதாக சமூக ஊடங்களில் வரும் செய்தி தவறானவை

எந்த ஒரு வங்கியையும் மூடும் திட்டம் இல்லை. மாறாக வங்கிகளை வலிமையாக்கும் பொருட்டு, முதலீடுகளை வழங்கி, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கி சீர்த்திருத்தங்கள் அனைத்தும் இதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.