நாடு முழுவதும் 800 பொறியியல் கல்லூரிகளை மூட நடவடிக்கை… தமிழகத்தில் 34 கல்லூரிகள் மூடப்படுகிறது?

ஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவது, கல்வித் தரம் குறைந்தது உள்ளிட்ட காரணங்களால், நாடு முழுவதும் மிகக் குறைந்த மாணவர் சேர்க்கைக் கொண்ட 800 பொறியியல் கல்லூரிகளை 2018-ம் ஆண்டில் மூடிவிடும்படி அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து 2 வாரங்களில் அறிக்கை அளிக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஏஐசிடிஇயின் தலைவர் அனில் தத்தாத்ரேயா சஹஸ்ரபுத்ரே கூறியதாவது-

ஏ.ஐ.சி.டி.இ.யின் கடுமையான விதிமுறைகளால், ஆண்டுக்கு 150 கல்லூரிகள் தாங்களாகவே முன்வந்து மூடிவருகிறார்கள். முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பது, 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்கள் சேர்க்கை இருக்கும் பொறியியல் கல்லூரிகளை கடந்த 5 ஆண்டுகளாக மூடுமாறு தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளோம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒவ்வொரு பொறியியல் கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் சேர்க்கை பெறுகிறார்கள் என்பது குறித்த புள்ளி விவரங்களை கணக்கில் எடுத்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2014-15ம் ஆண்டில் 77 கல்லூரிகளும், 2015-16ம் ஆண்டில் 125 கல்லூரிகளும், 2016-17ம் ஆண்டில் 149 கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. 2017-18-ம் ஆண்டில் 64 பொறியியல் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

மமூடிவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகள் குறித்த பட்டியல் பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படவில்லை.

இதனால், அதிகப் பொறியல் கல்லூரிகளைக் கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகம் மற்றும் அரியானாவில் சேர்த்து 34 கல்லூரிகள் மூடப்பட உள்ளன. 

கல்லூரியை மூடுவதா? அல்லது அருகில் உள்ள பொறியியல் கல்லூரியுடன் இணைப்பதா என்பது குறித்து ஆலோசித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 2018-19ம் கல்வியாண்டில் நடைமுறைக்கு வரும்.

தெலங்கானாவில் அதிகபட்சமாக 64 கல்லூரிகளும், அடுத்தபடியாக மஹாராஷ்டிராவி் 54 கல்லூரிகளும், உத்தரப்பிரதேசத்தில் 47 கல்லூரிகளும் மூடப்பட உள்ளன. தமிழ்நாடு, அரியானாவில் சேர்த்து 31 பொறியியல் கல்லூரிகளும், ராஜஸ்தானில் 30, ஆந்திராவில் 29 கல்லூரிகளும், குஜராத்தில் 29 கல்லூரிகளும் மூடப்பட உள்ளன.கர்நாடக, மத்தியப்பிரதேசத்தில் சேர்த்து 21 கல்லூரிகளும், பஞ்சாபில் 19 கல்லூரிகளும் மூடப்படுகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்துக்கு 2-வது இடம்

நாடு முழுவதும் ஏஐசிடிஇ-யின் அங்கீகாரம் பெற்று 10 ஆயிரத்து 361 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் அதிகபட்சமாக  ஆயிரத்து 500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதற்கடுத்த இடத்தில்  ஆயிரத்து 300 பொறியியல் கல்லூரிகளுடன் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. 

உத்தரப்பிரதேசம் ஆயிரத்து 165, ஆந்திரா 800 பொறியியல் கல்லூரிகளைக் கொண்டிருக்கின்றன. கர்நாடகாவில் சுமார் 600 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 

ஏஐசிடிஇயின் முடிவை அடுத்து சில கல்லூரிகள் மேலும் ஒரு ஆண்டு கால அவகாசம் கோரியுள்ளன. ‘‘மாணவர் சேர்க்கைய அதிகரிக்க பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். ஆனாலும் முயற்சி பலன் தரவில்லை’’ என அந்த கல்லூரிகளின் நிர்வாகத்தினர் கவலையுடன் ெதரிவித்தனர்.