8 years old girl sexually harassed by minors

மகராஷ்டிரா மாநிலம் புனேவில் 8 வயது சிறுமியை 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் கொந்த்வா பகுதியில் 8 வயது சிறுமியை 6 பேர் பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளனர். அவர்களில் ஒருவன் மட்டும் 19 வயதானவன். மற்ற 5 பேரும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பது மேலும் அதிர்ச்சிக்குரிய விஷயம்.

வயிற்று வலி காரணமாக அந்த சிறுமியை பெற்றோர் மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். அப்போது, அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். 

வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார், 19 வயதான ஒருவனை பிடித்து விசாரித்து வருகின்றனர். மற்ற 5 சிறுவர்களையும் போலீசார் தேடிவருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமியை கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக அவ்வப்போது அந்த 6 கொடூரன்களும் பாலியல் வன்கொடுமை செய்துவந்ததும், அவர்களின் மிரட்டலுக்கு பயந்து சிறுமி வீட்டில் சொல்லாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என குரல்கள் ஓங்கி ஒலித்துவரும் நிலையில், தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேற்றப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்து அண்மையில் வேதனை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? கடந்த பத்தாண்டுகளில் நடந்த வன்கொடுமைகள் எத்தனை? அவற்றில் எத்தனை பேருக்கு தண்டனை கிடைத்துள்ளன? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 மாத பெண் குழந்தை முதல் 100 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது 8 வயது சிறுமியை சிறுவர்கள் இணைந்து வன்கொடுமை செய்த சம்பவம், இனிமேலாவது இதுபோன்ற வன்கொடுமைகளை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது.