Asianet News TamilAsianet News Tamil

தான் யார் என்று சொல்லாமல் 8 நாட்களாக மூட்டை தூக்கிய IAS அதிகாரி... இது அல்லவோ மக்கள் சேவை

தான் என்கிற அடையாளத்தை வெளியே கூறாமல் கேரள நிவாரண முகாமில் 8 நாட்கள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வேலை செய்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

8 days IAS officer toiled at Kerala relief camp
Author
Kerala, First Published Sep 6, 2018, 10:17 AM IST

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 8-ம் தேதிக்கு பின் பெருமழை பெய்து மாநிலத்தின் பெரும்பகுதியை வெள்ளக்காடாக்கியது. 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின, 400-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்துக்கும், நிலச்சரிவுக்கும் பலியானார்கள். 10-லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை நின்று, வெள்ளம்நீர் வடிந்துள்ளதால், மக்கள் நிவாரண முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

இதில் தாதர் மற்றும் நாகர்நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருபவர் கண்ணன் கோபிநாதன். இவர் 2012-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அதிகாரி. இவர் கடந்த மாதம் 26-ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. ஒருகோடிக்கான காசோலையை முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைக்க வந்தார். காசோலையை முதல்வரிடம் ஒப்படைத்த கண்ணன் அங்கிருந்து தனது சொந்த கிராமமான புத்தம்பள்ளிக்குச் செல்லவில்லை, தனது குடும்பத்தினரையும் சந்திக்கவில்லை.

8 days IAS officer toiled at Kerala relief camp

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட செங்கனூர் பகுதிக்கு கண்ணன் கோபிநாதன் வந்தார். அங்குள்ள நிவாரண முகாமுக்குச் சென்ற கண்ணன் தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று அங்கிருந்தவர்களிடம் கூறவில்லை. நிவாரண முகாம்களில் சேவை செய்யும் தன்னார்வலர்களில் ஒருவராக தன்னைக் காட்டிக் கொண்டு மக்களுக்கு உதவிச் செய்யத் தொடங்கினார்.

கொச்சி துறைமுகத்தில் இருந்து லாரியில் இருந்து வரும் பொருட்களை இறக்குதல், மற்ற நிவாரண முகாம்களுக்கு தேவையான பொருட்களை பிரித்து அனுப்புதல், மக்களுக்கு உணவு பரிமாறுதல் தலையில் சுமந்து சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பொருட்களை அளித்தல் போன்றவற்றை கண்ணன் செய்தார்.

ஏறக்குறைய 8 நாட்கள் ஒரு சாதாரண கூலித்தொழிலாளி போன்று அனைத்து பணிகளையும் கண்ணன் செய்த நிலையில், 9-வது நாள் கண்ணன் யாரென்று அங்கிருந்த அதிகாரிகள் சிலர் கண்டுபிடித்தனர். அதன்பின் கண்ணன் ஐஏஎஸ் அதிகாரி என்று ெதரிந்தவுடன் மிகவும் பணிவுடன் நடந்து கொண்டனர், சிலர் மன்னிப்பும் கேட்டனர். சிலர் கண்ணன் ஐஏஎஸ் அதிகாரி எனத் தெரிந்ததும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

8 days IAS officer toiled at Kerala relief camp

இது குறித்து ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் கூறுகையில், நான் எதையும் பெரிதாகச் செய்யவில்லை. நான் ஒரு பார்வையாளர்தான். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடக்கத்தில் இருந்து மக்களுக்காக பணியாற்றி வரும் உண்மையான ஹீரோக்கள் அதிகமானோர் இருக்கிறார்கள்.

சிலர் அதிகாரிகள் என்னிடம் மன்னிப்புக்கேட்டார்கள். நிவாரணப் பணியின்போது என்னை சிலர் திட்டினார்கள், கோபமாகப் பேசினார்கள், அதற்காக வருத்தம் தெரிவித்தார்கள் ஆனால், புன்னகையுடன் அதைப் பற்றியெல்லாம் அப்போதே மறந்துவிட்டேன் என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டேன் எனத் தெரிவித்தார்.

8 days IAS officer toiled at Kerala relief camp

இதற்கிடையே கண்ணன் குறித்த செய்தியைச் சேகரிக்கச் சென்ற ஊடகத்தாரிடம் தயவு செய்து என்னைப் பற்றி எந்த செய்தியும் பிரசுரிக்க வேண்டாம், என் பணியை பெரிதுபடுத்துவது அது நியாயமில்லாமல் ஆகிவிடும். உண்மையான ஹீரோக்கள் இன்னும் களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதே உத்வேகத்தோடு கேரள மக்கள் பணியாற்றினால், விரைவில் கேரளா இந்த துயரத்தில் இருந்து மீளும் எனத் தெரிவித்தார்.

கேரளாவில் இருந்து தாதர் நாகர் ஹாவேலிக்குச் சென்று, தான் கேரளாவில் 8 நாட்கள் நிவாரண முகாமில் பணியாற்றிய நாட்களை தன்னுடைய விடுமுறையில் கழித்துக்கொள்ள கண்ணன் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அதை கண்ணனின் விடுப்பில் இருந்து கழிப்பதற்கு பதிலாக, அலுவலகப் பயணமாகவே நிர்வாகம் எடுத்துக்கொண்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios