இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடைபெறும் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு 750 யாத்ரீகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வெளியுறவு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு இந்த ஆண்டு 750 யாத்ரீகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த யாத்திரை ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடைபெறும்
என வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இன்று யாத்திரைக்கு பதிவு செய்த யாத்ரீகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான கணினிமயமாக்கப்பட்ட குலுக்கலை நடத்தினார். இந்த ஆண்டு, 5561 விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இதில் 4,024 பேர் ஆண்கள், 1,537 பேர் பெண்கள்.

"தேர்ந்தெடுக்கப்பட்ட 750 யாத்ரீகர்கள், ஒவ்வொரு குழுவிற்கும் லிபுலேக் வழியாக 50 யாத்ரீகர்கள் கொண்ட 5 குழுக்களாகவும், நாது லா வழியாக 50 யாத்ரீகர்கள் கொண்ட 10 குழுக்களாகவும் பயணிப்பார்கள்," என்று வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

யாத்ரீகர்களுக்கு அமைச்சர் வாழ்த்து:

யாத்ரீகர்கள் ஒருவருக்கொருவர் அக்கறை காட்டுவதோடு சுற்றுச்சூழலின் புனிதத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் பொறுப்புணர்வு கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வலியுறுத்தினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட யாத்ரீகர்களுக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இரண்டு வழிகளும் இப்போது முழுமையாக மோட்டார் வாகனம் செல்லக்கூடியவை, மேலும் மிகக் குறைந்த அளவுக்கே டிரெக்கிங் அனுமதி உள்ளது. வழித்தடம் மற்றும் குழு விவரங்கள் யாத்திரை இணையதளத்தில் (https://kmy.gov.in) கிடைக்கின்றன.

நியாயமான முறையில் கணினி மூலம் தேர்வு செயல்முறை நடத்தப்பட்டது என்றும் யாத்ரீகர்கள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெளியுறவுத்துறை கூறியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட யாத்ரீகர்களுக்கு SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் அவர்களின் தேர்வு குறித்து தெரிவிக்கப்படுகிறது.