ஜம்மு காஷ்மீரில் நகர் மக்களவை தொகுதி, மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களில் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்தது. இதில் காஷ்மீர் மற்றும் மத்திய பிரதேசத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

ஜம்மு காஷ்மீர்

நகர் மக்களவை தொகுதியின் பிடிபி கட்சி எம்பியாக இருந்த தாரிக் அகமது, கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியான அந்த தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் காலை முதற்கொண்டு தொகுதிக்குட்பட்ட புத்காம், கந்தர்பெல், நகர் மாவட்டங்களில் தொடர் வன்முறை ஏற்பட்டது.

இதனை தடுக்க போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 6 பேர் உயிரிழந்தனர். போலீசார் தரப்பில் 10 பேர் காயம் அடைந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவியதால் 70 சதவீத வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இறுதியில் மொத்தம் 6.5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014 மக்களவை தேர்தலில் 26 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசம்

அதெர் மற்றும் பந்தவ்கர் சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அதெர் தொகுதியில் வன்முறை் சம்பவங்கள் நடந்தன. இந்த தொகுதிக்குட்பட்ட சங்க்ரி கிராமத்தில் காங்கிரஸ் – பாஜகவினர் இடையே வன்முறை நடந்ததால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹேமந்த் கதாரேவின் காரை மர்ம நபர்கள் தாக்கினர். வாக்குச்சாவடி ஒன்றை சூறையாடியதாக புகார் எழுந்தது. இந்த தொகுதியில் மொத்தம் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதேபோன்று பந்தாவ்கர் தொகுதியில் 65 சதவீத வாக்குகள் பதிவாகின.

டெல்லி

காஷ்மீர், மத்திய பிரதேசத்தை தவிர்த்து டெல்லி, கர்நாடகா, அசாம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.

டெல்லியில் ரஜவ்ரி கார்டன் தொகுதி ஆம் ஆத்மி உறுப்பினராக இருந்த ஜர்னைல் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நேற்று அந்த தொகுதிக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இந்த தொகுதியை கைப்பற்ற பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே போட்டி காணப்படுகிறது. மொத்தம் 44 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற மாநிலங்கள்

ராஜஸ்தானில் தோல்பூர் தொகுதியில் நடந்த வாக்குப்பதிவில் 74 சதவீதமும், அசாமின் தெமாஜி தொகுதியில் 67 சதவீதமும், மத்திய பிரதேசத்தின் பந்தவ்காரில் 65 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. கர்நாடகாவின் குண்டுலுபேட் தொகுதியில் 78 சதவீதமும், நனாஜனாகட் தொகுதியில் 76 சதவீதமும், மேற்கு வங்காளத்தின் காந்தி தக்‌ஷின் தொகுதியில் 80 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.