முதியவரை காரில் 8 கி.மீ. தரதரவென இழுத்துச் சென்று கொன்ற கொடூரம்
பீகார் மாநிலத்தில் 70 வயது முதியவர் மோதிய கார் அவரை 8 கி.மீ. தொலைவுக்கு தரதரவென்று இழுத்துச் சென்றதில் முதியவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இந்தக் கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 70 வயது முதியவர் தனது சைக்கிளுடன் கொடாவா அருகே உள்ள பங்காரா சாலையைக் கடக்கும்போது அவர் மீது கார் மோதியது.
கார் மோதியபின் முதியவர் காரின் முன்புறத்தில் சிக்கினார். ஆனால், காரை ஓட்டிவந்தவர் வண்டியை நிறுத்தாமல் 8 கி.மீ. தொலைவுக்கு முதியவரை காருடன் இழுத்துச்சென்றார் என அப்பகுதியில் இருந்து நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
கார் கோபால்கஞ்ச் பகுதியிலிருந்து வந்தது என்றும் அதனைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். விபத்து நடந்த பகுதியில் இருந்த சிலர் பைக்கில் காரை பின்தொடர்ந்து சென்று நிறுத்த முயற்சி எடுத்தனர். இருப்பினும் சுமார் ஒருமணிநேரம் அந்த முதியவர் காரின் முன்புறம் தொங்கியபடியே இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார் என்று காவல்துறை கூறுகிறது.
ஷாருக்கானா? அவரு யாரு? பத்திரிகையாளர்கள் வாயை அடைத்த முதல்வர்!
பிப்ரகோதி என்ற இடத்திற்கு வந்தவுடன் காரை நிறுத்தியபோது முதியவர் கார் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பலியான முதியவர் அருகில் உள்ள பங்காரா என்ற கிராமத்தைச் சேர்ந்த சங்கர் சவுத்ரி என்று காவல்துறை விசாரணையில் தெரிந்துள்ளது.
கொடாவா காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. முதியவர் மீது மோதிய கார் மோதிஹரியைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும் அதனை ஓட்டிவந்த டிரைவர் தலைமறைவாகிவிட்டார் என்று காவல்துறையினர் சொல்கின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி காட்சிகள் மூலம் டிரைவரைப் பிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளது.
முதியவர் அநியாயமாகக் கொல்லப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் சாலையை மறித்து உடனடியாக காரை ஓட்டிய டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் வந்து குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்ததால் கலைந்து சென்றனர்.
Buzz Aldrin: நிலவில் கால்பதித்த ஆல்ட்ரினுக்கு 93 வயதில் 4வது திருமணம்!