குஜராத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள பர்திகுயி பகுதியில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த ஓட்டலின் கழிவுநீர் தொட்டியை பாதுகாப்பு கவசமின்றி சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 7 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பாதுகாப்பு கவசமில்லாமல் சுத்தம் செய்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.