உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவவர்களின் எண்ணிக்கை 733 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தனிமை சிகிச்சை பெற்றுவந்த நபர் நேற்று மரணமடைந்தார். இதையடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் பகுதியில் 7 மாத கைக்குழந்தைக்கும் 8 வயது சிறுவனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 16 ஆம் தேதி சவுதி அரேபியாவிலிருந்து தங்களது பெற்றோருடன் வந்த குழந்தைகளுக்கு அங்கிருக்கும் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 7 மாத கைக்குழந்தைக்கும் 8 வயது சிறுவனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இதையடுத்து அவர்கள் தனிமை சிகிச்சையில் வைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மிக இளவயது நபராக இந்த குழந்தை இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் குழந்தையின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோருக்கு கொரோனா குறித்து எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என்றும் பரிசோதனை முடிவுகள் முழுமையாக வெளியான பிறகே அது குறித்து கூற முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.