ஆந்திராவில் திருமண வீட்டார் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கோகவரம் மண்டலத்தில் புகழ் பெற்ற தாட்டிகொண்டா மலை மீது ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வரசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கோக்கவரத்தை சேர்ந்த ஜோடிக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், திருமணம் மடிந்து 24 பேரை ஏற்றிக்கொண்டு மினிவேன் மலையிலிருந்து கீழே இறங்கியது. பாதி வழியில் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் மலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மினிவேன் அடியில் சிக்கியர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.