65000 unit blood wasted in sewege

தானமாகப் பெறப்பட்ட சுமார் 65,000 யூனிட்டுகளுக்கு மேலான ரத்தம், சாக்கடையில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்ட அவலம், பெங்களூருவில் நடந்துள்ளது. ரத்தம் சேமிக்கப்படும் பைகள் சேதம் அடைந்ததாலும் ரத்தம் வீணடிக்கப்பட்டுள்ளது.

ரத்ததானத்தின் அவசியம் குறித்து பல்வேறு ஊடகங்கள் மூலமாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், பல்வேறு அமைப்புகளும் ரத்ததானத்தை வலியுறுத்தியும் ரத்ததானம் செய்தும் வருகின்றனர். இதனால், ரத்தம் தானம் அளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல், ரத்தம் தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், தானம் பெறப்படும் ரத்தம் எவ்வளவு எனவும், இந்த ரத்தம் முழுவதும் தேவைப்படுவோருக்கு போய் சேருகிறதா என்பதையும் கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் சோமண்ணா கேள்வி எழுப்பியிருந்தார். சோமண்ணாவின் கேள்விக்கு பதிலளித்த கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் குமார், கடந்த 2015-16 ஆம் ஆண்டில் 64,361 யூனிட் ரத்தம் சாக்கடையில் கொட்டி அழிக்கப்பட்டதாகவும், இதில் 32,644 யூனிட்டுகள் காலாவதி ஆகிவிட்டதாகவும் கூறினார்.

2016-17 ஆம் ஆண்டில் 64,913 யூனிட் ரத்தமும் காலாவதி ஆனதால், சாக்கடையில் கொட்டி அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கர்நாடக சுகாதார துறை அமைச்சர் கூறியதில் இருந்து இதுவரை 1,88,537 யூனிட் ரத்தம் 3 ஆண்டுகளில் வீணடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.