நடிகர் வடிவேலு படக் காமெடியில் கிணத்தைக் காணோம் நகைச்சுவையைப் பார்த்திருக்கிறோம். ஆனால்,பிஹாரில் இரவோடு இரவாக ஒரு 500 டன் பாலத்தையே கொள்ளையர்கள் பெயர்த்தெடுத்துச் சென்றுவிட்ட சம்பவம் நடந்துள்ளது.
நடிகர் வடிவேலு படக் காமெடியில் கிணத்தைக் காணோம் நகைச்சுவையைப் பார்த்திருக்கிறோம். ஆனால்,பிஹாரில் இரவோடு இரவாக ஒரு 500 டன் பாலத்தையே கொள்ளையர்கள் பெயர்த்தெடுத்துச் சென்றுவிட்ட சம்பவம் நடந்துள்ளது.
இரும்பு பாலம்
பிஹாரின் ரோடாஸ் மாவட்டத்தில் அமியவார் கிராமத்தில் கடந்த 1972-ம் ஆண்டு அரா கால்வாயைக் கடக்க அரா-சோன் பகுதிகளுக்கு இடையே இரும்பினால் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் ஏறக்குறைய 50 டன் எடை கொண்டது. இந்த பாலம் காலப்போக்கில் வலுவிழந்துவிட்டது. இதையடுத்து பிஹார் அரசு கான்க்ரீட்டால் புதிதாக பாலம் கட்டியது.

பட்டப்பகலில் திருட்டு
இந்த புதிய பாலத்தில்தான் கடந்த சில ஆண்டுகளாக மக்களும், வாகனங்களும் சென்று வருகின்றன. பழங்கால இரும்பு பாலத்தையாரும் பயன்படுத்தவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு சிலர் வந்து பாலத்தை பார்வையி்ட்டு அதை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மக்களுக்கு அதிர்ச்சி
இதற்காக வெல்டிங் எந்திரங்கள், மண் அள்ளும் எந்திரம் ஆகியவற்றின் உதவியால் அந்த பாலத்தை உடைத்து எடுக்கத் தொடங்கினர். ஆனால், திடீரென்று நேற்று காலை எழுந்து பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரவோடு இரவாக அந்தப் பாலத்தையும் காணவில்லை, அங்கிருந்த நபர்களையும் காணவில்லை.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் பொதுப்பணித்துறையிடம் விசாரித்தபோது தங்கள் தரப்பிலிருந்து யாரும் வந்து பாலத்தை அகற்ற வரவில்லை எனத் தெரிவித்தனர். இதையடுத்து, இரவோடு இரவாக பாலத்தை பெயர்த்தெடுத்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீஸிடம் ஊர் மக்கள் புகார் அளித்தனர்.
போலீஸில் புகார்
இதுகுறித்து நஸ்ரிகாஞ்ச் போலீஸ் நிலைய அதிகாரி சுபாஷ் குமார் கூறுகையில் “ பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இரும்பு பாலத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுவிட்டதாக புகார் வந்துள்ளது. முதல்தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். இந்த மாவட்டத்தில் உள்ள பழைய இரும்பு வியாபாரிகளிடம் விசாரித்து வருகிறோம். இந்த பாலம் 60 அடி நீளம், 12 மீட்டர் உயரம் கொண்டது” எனத் தெரிவித்தார்.

முதல் முறை அல்ல
பாலத்தை திருடிச் செல்வது முதல்முறை சம்பவம் அல்ல. இதற்கு முன் கடந்த 2012ம் ஆண்டு, செக் குடியரசில் பட்டப்பகலில் ஒரு பாலத்தை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அமெரிக்காவில் 2004ம் ஆண்டு பென்சில்வேனியாவில் ஒரு லட்சம் டாலர் மதிப்பிலான பாலத்தை திருடிச்சென்றனர். உக்ரைனில் 36 அடிப்பாலத்தை பெயர்த்தெடுத்து இரும்புக்கடையில் எடைக்கு விற்ற சம்பவங்களும் நடந்துள்ளன
