தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 11 பேர் நேற்று முன்தினம் சூர்யாபேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இரண்டு கார்களில் சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் கக்கிராலா அருகே வந்த போது முன்னால் சென்ற கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

தாறுமாறாக சென்ற நிலையில் அருகிலிருந்த நாகர்ஜுனா சாகர் கால்வாயில் கார் பாய்ந்துள்ளது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றொரு காரில் வந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவலர்கள் தீயணைப்பு படையினரின் உதவியுடன் மீட்பு பணியில்  ஈடுபட்டனர். ஆனால் 18 அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்தோடிய நிலையில் கால்வாயில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் கார் விழுந்த வேகத்தில் அடித்துச்செல்லப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்து நீரில் அடித்துச்செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 15 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காரையும், அதில் பயணம் செய்த ஆறு பேரையும் சடலமாக மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். உயிரிழந்த 6 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியபோது கால்வாயில் கார் பாய்ந்து ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.