ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மண்டல போக்குவரத்து அலுவல அதிகாரிகள்தான் இந்த அபராதம் விதித்துள்ளார்கள். இதுகுறித்து சம்பல்பூர் மண்டல போக்குவரத்து அதிகாரி லலித் மோகன் பெஹ்ரா கூறுகையில், “ கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தோம். அப்போது நாகாலாந்து பதிவெண் கொண்ட ஒரு லாரி வந்தது. அதை மறித்துசோதனை செய்தோம். 

அப்போது அந்த ஆவணங்களை சரிபார்த்தபோது, கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து அந்த லாரி சாலைவரி செலுத்தவில்லை என்பது தெரிந்தது. ஒடிசா போக்குவரத்துவிதிப்படி இதன் மதிப்பு ரூ.6.40 லட்சம்.மேலும், அந்த லாரியில் இன்சூரன்ஸ், மாசுக்கட்டுப்பாட்டு சான்று, பெர்மிட், லாரியில் ஆட்களை ஏற்றியது போன்ற விதிமீறலுக்காக மொத்தம் சேர்த்து ரூ.6.53 லட்சம் அபராதம் விதித்தோம்” எனத் தெரிவித்தார்.

இந்த லாரியின் உரிமையாளர் சைலேஷ் குமார். இவர் நாகாலாந்து பேகக் நகரைச் சேர்ந்தர். லாரி ஓட்டுநர் திலிப் கர்தா ஜர்சாகுடாவைச் சேர்ந்தவர். அபராதம் செலுத்தாதல், லாரியை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்துவைத்துள்ளார்கள்.

ஆவணங்கள் இல்லாதமைக்கு ரூ.100, உத்தரவுகளை மதிக்காதிருத்தலுக்கு ரூ.500, காற்று ஒலிமாசுக்கு ரூ.1000, சரக்கு ஏற்றும் வாகனத்தில் மனிதர்களை அமரவைத்து அழைத்தது வந்ததற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது, பெர்மிட் இல்லாமைக்கு ரூ.5000, காப்பீடு இல்லாதமைக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

 இந்த அபாராதம் மத்திய அரசு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படாமல் பழைய போக்குவரத்துவிதிகள் படி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த அபராதம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி விதிக்கப்பட்டது. ஆனால், புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்தது. ஒருவேளை புதிய மோட்டார் வாகனச்சட்டத்தில் விதிக்கப்பட்டு இருந்தால், இன்னும் அதிகரித்து  இருக்கும்.