கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு தடை செய்த ரூ.500 நோட்டு மூலம் வரும் டிசம்பர் 15-ந்தேதி வரை 21 வகை யான சேவைகளைப் பெறமுடியும்.
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ500 நோட்டுகளை கடந்த 8-ந்தேதி தடை செய்து பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த 24-ந்தேதி வரை வங்கிகள், தபால்நிலையங்களில் கொடுத்து மக்கள் பழைய ரூபாய்களை மாற்றிக்கொள்ளலாம் என அரசு தெரிவித்தது. ஆனால், அதற்குரிய காலக்கெடுவும் நேற்றுமுன்தினத்தோடு முடிந்தது.
இனி வங்கிகளில் ரூ.1000, 500 நோட்டுகளை டெபாசிட் மட்டும் செய்ய முடியும். அதே சமயம், ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தி டிசம்பர் 15-ந்தேதி வரை 21 வகையான சேவைகளைப் பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது. அந்த சேவைகள் பின்வருவன
1. மருத்துவரின் ஆலோசனை பரிந்துரைச் சீட்டோடு அரசு மருத்துவமனைகள், மருந்தகங்களில் பயன்படுத்தி மருந்துகள், சிகிச்சை பெற முடியும்.
2. மருத்துவரின் ஆலோசனை பரிந்துரைச்சீட்டு மற்றும் சிகிச்சை பெறுபவரின் ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் காண்பித்து அனைத்து மருந்துக்கடைகளிலும் மருந்துகள் வாங்கி பணம் செலுத்தலாம்.
3. ரெயில்வே டிக்கெட் , மத்தியஅரசு, மாநில பஸ்களில் டிக்கெட் , விமான டிக்கெட் ஆகியவற்றை முன்பதிவு செய்வதற்கும், வாங்குவதற்கும் பயன்படுத்த முடியும்.
4. மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் நடத்தப்படும் பால் விற்பனை நிலையங்கள்.
5. அரசு நிறுவனங்கள் நடத்தும் எரிபொருள் விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல், கியாஸ் வாங்க பயன்படுத்தலாம்.
6. உடல் அடக்கம் செய்யும் சுடுகாடு, எரியூட்டும் அரங்குகளில் பயன்படுத்தலாம்.
7. சர்வதேச விமானநிலையங்களுக்கு வந்து, செல்லும் பயணிகள் ரூ.500 நோட்டை பயன்படுத்தலாம்.
8. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரூ.500 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
9. நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ.500 பயன்படுத்தலாம்.
10. சமையலுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்களை வாங்க பயன்படுத்தலாம்.
11. ரெயில் பயணத்தில் கேட்டரீங் சேகை செய்வோரிடம் ரூ.500 கொடுத்து உணவுகளை வாங்கலாம்.
12. மெட்ரோ நகரங்களில் மெட்ரோ ரெயில், புறநகர் ரெயில் சீசன் டிக்கெட், டிக்கெட் வாங்க பயன்படுத்தலாம்.
13. மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தொல்லியல்துறை அருங்காட்சியகத்தை பார்வையிடும் போது, நுழைவுச்சூட்டு வாங்கலாம்.
14. மத்திய,மாநில அரசுகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வரிகள், கட்டணங்கள், அபராதங்கள் ஆகியவற்றையும் செலுத்தலாம்.
15.குடிநீர், மின்சாரம் ஆகியவற்றின் கட்டணம், நிலுவை கட்டணம் ஆகியவற்றை தனிநபர்கள், வீடுகள் மட்டும் செலுத்தலாம். நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அனுமதியில்லை. அட்வான்ஸ் பேமன்ட் செலுத்தக் கூடாது.
16. நீதிமன்ற கட்டணங்களைச் செலுத்தலாம்.
17. அரசு அங்கீகாரம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் பயன்படுத்தலாம்.
18.மத்திய, மாநில அரசு, நகராட்சி, உள்ளாட்சி பள்ளிகளில் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தலாம்.
19. மத்திய, மாநில அரசுகளின் கல்லூரிகளில் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தலாம்.
20. ப்ரீபெய்டு மொபைல் போனில் ரூ.500 வரை ரீசார்ஜ் செய்யலாம்.
21. நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ.5 ஆயிரம் வரை பொருட்கள் வாங்கும்போது, ரூ.500 நோட்டை பயன்படுத்தலாம்.
