திருமணம் என்றால் 500 நபர்கள், மற்ற விசேஷங்கள் என்றால் 100 நபர் மட்டுமே வர வேண்டும், ஸ்பீக்கர் வைத்து பாட்டு ஒலிபரப்பக்கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகளை ஜம்மு-காஷ்மீர் அரசு மக்களுக்கு விதித்துள்ளது.

மாநிலத்தில் சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்கும் விதத்தில், தேவையில்லாத செலவுகளைக் குறைத்து நாட்டில் சிறந்த மாநிலமாக உருவாக இந்த திட்டத்தை காஷ்மீர் அரசு அமல்படுத்தியுள்ளது.

இது குறித்து மாநில நுகர்வோ விவகாரத்துறை அமைச்சர் சவுத்ரி ஜூல்பிகர் நேற்று நிருபர்களிடம் நேற்று கூறுகையில், “ மாநிலத்தில் சிக்கன நடவடிக்கையை கடைபிடித்து, தேவையில்லாத செலவுகளைக் குறைத்து நாட்டுக்கே உதாரண மாநிலமாக திகழ நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். அதன்படி, தனியார், சமூக மற்றும் அரசு விழாக்களில் சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

ஒரு வீட்டில் மகன், மகள் திருமணம் நடந்தால், அங்கு அதிகபட்சமாக 500 நபர்கள் மட்டுமே வர வேண்டும், மற்ற விசேஷங்களுக்கு அதிகபட்சமாக 100 நபர்கள் மட்டும் வரலாம். திருமண அழைப்பிதழ்கள் உள்ளிட்ட அரசு அழைப்பிதழ்களில் இனிப்புகள், உலர் பழங்கள் வைத்து கொடுக்கக் கூடாது.

விசேஷங்களின் போதும், அரசு விழாக்கள், தனியார் நிகழ்ச்சிகளில் ஒலிபெருக்கி வைத்து பாடல் இசைப்பது, பட்டாசுகள் வெடிப்பது ஆகியவையும் தடை செய்யப்படுகிறது. இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது'' என்று தெரிவித்தார்.